பக்கம்:தேவநேயம் 1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

தேவநேயம்


என்று எண்ணிய காலையில், தமிழ் மொழியையும் தமிழ் மண்ணையும் தமிழ் இனத்தையும் தாங்கிப் பிடித்து ஊக்கும் - வளர்க்கும் - வண்மையராய் - பாவாணர்க்கு அணுக்கராய் - அவரால் உரையும் பாட்டும் ஒருங்கு கொண்ட பெருந்தொண்டராய்த் திகழ்ந்த சிங்க புரிவாழ் தமிழ்த்திரு வெ. கோவலங்கண்ணனார் அவர்கள் தமிழ் விழா ஒன்றற்காகச் சென்னை வந்த போது யானும், முனைவர் கு.திருமாறனாரும் சந்தித்து அளவளாவிய போது இக்கருத்தை யான் உரைக்க உடனே பாவாணர் அறக்கட்டளை தோற்றுவிப்பதாகவும் அதன் வழியே தேவநேயம் வெளிக் கொணரலாம் எனவும் கூறி அப்பொழுதேயே அறக்கட்டளை அமைத்தார்.
தேவநேயர் படைப்புகள் அனைத்திலும் உள்ள சொல்லாய்வுகளைத் திரட்டி அகர நிரல் படுத்திப் பதின்மூன்று தொகுதிகள் ஆக்கினேன். பதிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது; அச்சிடும் பொறுப்பு, பாவாணர் பல காலத்துப் பலவகையால் வெளியிட்ட நூல்களையும் கட்டுரைகளையும் ஒருங்கே தொகுத்து ஒரே நேரத்தில் வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் நாடு மொழி இனப் போராளி கோ.இளவழகனாரிடம் ஒப்படைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அத்தேவநேயம் தமிழ் ஆய்வர், தமிழ் மீட்பர் அனைவர் கைகளிலும் இருக்க வேண்டும் என்னும் வேணவாவால் மீள்பதிப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடுகிறது.
பாவாணர் அறக்கட்டளை நிறுவிய கோவலங்கண்ணனார் புகழ் உடல் எய்திய நிலையில், அவர் என்றும் இறவா வாழ்வினர் என்பதை நிலைப்படுத்தும் வகையில் அவர்க்குப் படையலாக்கி இப்பதிப்பு வெளிப்படுகின்றது.
மொழி இன நாட்டுப் பற்றாளர் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல், பல் பதிப்புகள் காண வேண்டும். வருங்கால இளைஞர்க்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும். அதற்குத் தூண்டலும் துலக்கலுமாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் மீட்டெடுப்புப் பற்றுமையரும் தொண்டருமாவர்.

வெளியீட்டாளர்க்கும் பரப்புநர்க்கும் பெருநன்றியுடையேன்.

வாழிய நலனே!

இன்ப அன்புடன்

வாழிய நலனே!

இரா. இளங்குமரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/5&oldid=1479794" இலிருந்து மீள்விக்கப்பட்டது