பக்கம்:தேவநேயம் 1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

தேவநேயம்


சான்றிதழ்

பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சி பற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகலத் தேவையினை நிறைவு செய்தன.தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய 'சொல்லாராய்ச்சி', பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய 'மொழியறிவியல்', பேராசிரியர் சாய்சு எழுதிய 'ஒப்பியல் மொழிநூல்' முதலிய ஆங்கில நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக் கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ் மொழியறிவுப்பரப்பு, பண்டாரகர் நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல் அறியப்படாத வட்டாரத்தில் செய்ததொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டுமென்று எம்மைத் தூண்டியது எனவே 'ஞானசாகரம்' (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத்துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டோம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத்துறையில் ஆராய்வதற்கு முன் வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர் தாம் எழுதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித்துறை மிகவும் விரிவும் ஆழமுடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினோம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/7&oldid=1479796" இலிருந்து மீள்விக்கப்பட்டது