பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

பதிப்புரை

 

“தேவார ஒளிநெறி” எனப்படும் ‘திருநெறிய தமிழாம்’ திருமுறை விளக்கப் பெருநூல்-திருவருள்நூல், திருவாளர் தணிகைமணி ராவ்பஹதூர் வ. சு. செங்கல்வராய பிள்ளை, எம். ஏ., அவர்களால் சிவனருள் துணைகொண்டு யாக்கப் பெற்றது.

இவ் வொளிநெறித் தோற்றமும், மற்றுள்ள சிறப்புக்களும், இதன் அருளாசிரியர் மாண்புகளும், 'சம்பந்தர் தேவார ஒளிநெறித்’ தொகுதிகள் மூன்றனுள் நடுத் தொகுதிக்குரிய பதிப்புரையில் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

இம் முதற் றொகுதியினை ஆசிரியரவர்கள் 1946 இல் அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளனர். அதுவும் சில படிகளேயாகும். இப்பொழுது அவர்கள்பால் நூலுரிமையினைக் கழகத்தார் பெற்று வெளியிடுகின்றனர். மேலும், சம்பந்தர் தொகுதி இரண்டாவதும் மீண்டும் அச்சிடப்பட்டு வருகின்றது.

அப்பர் தேவார ஒளிநெறித் தொகுதி இரண்டும் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. சுந்தார் தேவார ஒளி நெறித் தொகுதியும் அச்சாகிக்கொண்டு வருகின்றது. விரைவில் வெளிவரும்.

இச் செயற்கருஞ் செயலாம் சிவத்திருப்பணியினைத் திருவருட்டுணையால் நிகழ்த்திக்கொண்டு வரும் ஆசிரியவர்களை வணங்கிப் போற்றுகின்றோம். அவர்கட்கு அம்மையப்பர் எல்லா நலங்களுடன் நீண்ட வாழ்நாளும் அருள்வாராக!

இத் தொகுதிகளைச் செந்நெறிச் செல்வர்களும் செந்தமிழன்பர்களும் வாங்கிக் கற்றுங் கற்பித்தும் நற்பயன் எய்துவார்களாக.

சைவசித்தாந்த நாற்பதிப்புக் கழகத்தார்.