பக்கம்:தைத் திங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 தைத் திங்கள்

தெளிந்திருக்குமாம். தைத் திங்களில் வையை யாற்றின் தண்ணீர் மிகவும் தெளிந்திருப்பதைக் கண்ட பெண்டிர் அந்தத் தைந் நீரை நோக்கிக் கூறுவதாகப் பரிபாடலில் உள்ள


"நீ தக்காய் தைந்நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும்"

என்னும் பகுதி, நீராடுவதற்கு ஏற்ற நிலையில் தைந் நீர் தெளிந்திருப்பதை அறிவிக்கிறது. மற்றும் அப்பாடலில் உள்ள


"உம்பர் உறையும் ஒளிகிளர் வானூர்பு ஆடும்
அம்பி கரவா வழக்கிற்றே"

என்னும் பகுதியில், வானத்தில், தேவர்கள் செல்லும் ஊர்தி வையைத் தண்ணீரில் தெரிவதாகக் கற்பனை செய்யப்பட்டுள்ள கவினைக் கண்டு மகிழலாம்.

கொளக் கொளக் குறையாமை:

தைந் நீருக்கு மேலும் ஒரு சிறப்பு கூறப்பட்டுள்ளது. சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனது நகரின் சிறப்பைக் கூறவந்த புலவர் கோவூர் கிழார், தைத் திங்கள் நீர்நிலையைப் போலக் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவு முதலிய வளமுடைய நகரம் அது- என்று விதந்து பாராட்டியுள்ளார். இதனை,


"தைஇத் திங்கள் தண்கயம் போலக்
கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்"

என்னும் (70-ஆம்) புறநானூற்றுப் பாடல் பகுதியாலறியலாம். தைத் திங்கள் தண் கயத்தின் வற்றாத வளத்தை இதனால் புரிந்து கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/101&oldid=1321334" இலிருந்து மீள்விக்கப்பட்டது