பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்கடிகை அக்காரக்கனி

89

(மிக்கான் - சிறந்தவன்; மறை - வேதம்; புகழ் - கீர்த்தி; பொலிகின்ற - விளங்கு கின்ற; தக்கான - தகவுடையவன்; அக்காரம் வெல்லக்கட்டி, உய்ந்து - பிழைத்து)

என்பது ஆழ்வார் பாசுரம். இந்த எம்பெருமான் எப்பொழுதும் மாலை அலங்காரத்துடன் இருப்பவன். கம்பீரமான உருவத்தன்; கண்களிலே சாந்தம் நிலவும் தன்மையன். இதனால்தான் ஆழ்வாரும் ‘தக்கான்’ (தக்க பெருமையையுடைய பரமதயாளு) என்றும், அநுபவிப்பவர்கட்கு அவன் வெல்லம்போல் இனிப்புள்ள கனியாக விளங்குகின்றான் என்றும் இத்தலத்து எம்பெருமானைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். வெல்லக் கட்டியையே விதையாகக் கொண்டு ஒரு மரத்தை யுண்டாக்கி அதில் பழம் பழுத்தால் எவ்வளவு இனிப்பாக இருக்குமோ அவ்வளவு இனிமை மிகுந்தவன் எம்பெருமான் என்பது ஆழ்வாரது திருவுள்ளம். ‘தக்கான்’ என்பதும், ‘அக்காரக்கனி’ என்பதும் இத்தலத்து எம்பெருமானுக்கு ஆழ்வார் சூட்டின திருநாமங்களாகும்.

எம்பெருமானார் (இராமாநுசர்) இத்தலத்திற்கு எழுந்தருளினபோது நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரத்தைக் கொண்டு இங்குள்ள எம்பெருமானை மங்களாசாசனம் செய்ததாக வரலாறு உண்டு. அப்பாசுரம்:

எக்காலத் தெந்தையாய் என்னுள் மன்னில்,மற்(று)
எக்கா லத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும்,என்
அக்காரக் கனியே! உன்னை யானே.[1]

(மன்னில் - பொருந்தியிருக்கப்பெறில்; மிக்கார் - சிறந்தவர்; வேத விமலர் - வேதம் வல்ல பரமைகாந்திகள்; விழுங்கும் . வாரிக்கொண்ட உன்மனை விழுங்கும் காணில் என்பதுபோல் விழுங்குதல்)

இதில் எம்பெருமானோடு சேரப்பேறும் பேற்றினைத் தவிர வேறொன்றையும் தாம் விரும்பவில்லை என்று தம் திருவுள்ளத்தைப் புலப்படுத்துகின்றார் ஆழ்வார்.

இந்த இரண்டு பாசுரங்களையும் அவன் சந்நிதியிலேயே ஒதி ஓதி உளங்கரைந்து தக்கானையும் தாயாரையும் சேவித்து, பிரசாதங்களைப் பெற்றுத் திரும்புகின்றோம்; அடிவாரத்திற்கே வந்துவிடுகின்றோம். அடுத்து, பக்கத்தில் சின்னமலை எனப்படும்

  1. திருவாய். 2-9:8