பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்றவூர் நித்திலம் 109

என்று கூறி மறைந்தார். திடுக்கிட்டெழுந்த அரசன் பூசலார் வாழும் ஊரை அடைந்தான். அந்த ஊரில் ஆலயம் கட்டப்பெறும் சின்னம் ஒன்றும் தெரியவில்லை. ஊராரை விசாரித்துப் பூசலார் இருக்கும் இடம் அறிந்து அவரையே நேரில் உசாவினான்; அவர் அமைத்த திருக்கோயிலைக் காட்டுமாறு பணித்தான். தான்கண்ட கனவையும் அவருக்கு எடுத்தியம்பினான். அரசன் கூறியதைக் கேட்ட பூசலார் இறைவனுடைய பெரும் கருணைத் திறத்தினைக் கேட்டுப் பேரானந்தம் அடைந்தார். தம்மையும் இறைவன் ஒரு பொருளாக மதித்தான் என்று எண்ண எண்ண அவர் மனம் பூரிப்பால் பெருகிற்று. அரசனும் பூசலாரின் பக்தியையும் இறைவனது பேரருளையும் கண்டு வியப்புற்றான். பூசலார் மனக்கோயிலின் நினைவாகப் பிற்காலத்தார் ஒரு சிறிய கோயிலை எழுப்பியுள்ளனர். இந்தப் பூசலாரைச் சேக்கிழார் பெருமான்,

‘நீண்டசெஞ் சடையி னார்க்கு

நினைப்பினால் கோயி லாக்கிப்

பூண்டஅன்பு இடைஅ றாத

பூசலார் பொற்றாள் போற்றி”

என்று மகிழ்ந்து போற்றுகின்றார். இந்தப் பூசல் அன்பன் வாழ்ந்த ஊர் திருநின்றவூராகும். எவ்வுள் கிடந்தானைச் சேவித்த நாம் திருநின்றவூர் எம்பெருமானைச் சேவிக்க அவாக் கொள்ளுகின் றோம். எப்படியோ திருமங்கையாழ்வாருக்குத் தப்பிவிட்ட திருத்தலத்தை நாம் கண்டுகளிக்க வேண்டும் என்ற அவா நம்மை உந்துகின்றது.

திருவெள்ளுரிலிருந்த பேருந்து மூலம் இருப்பூர்தி நிலையத்திற்கு வருகின்றோம். மாலை 3-40க்கு வண்டியேறி 4-மணிக்குத் திருநின்றவூர் நிலையத்திற்கு வருகின்றோம். நிலையத்திலிருந்து தென்திசையில் ஒரு கல் தொலைவிலுள்ளது திருநின்றவூர் என்னும் திருப்பதி. நிலையத்திலிருந்து நேர்வழி உண்டு. சரியாக வண்டி வசதி இல்லை. எவரும் அதை எதிர்பார்ப்பதும் இல்லை. நாமும் வாகன வசதி ஒன்றையும் எதிர்பாராமல் நடையைக் கட்டுகின்றோம் - குறுக்கு வழியாக. அரைமணி நேரத்தில் திருக்கோயிலை அடைகின்றோம். ஊர் நீர்வளமும் நிலவளமும் பொருந்திய ஊரே. இதனால் செல்வச் செழிப்புடைய ஊராக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்

4. மேலது : பூசலார் நாயனார் புராணம் -17.