பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2. சொன்னவண்ணம் செய்த பெருமாள்

ம்பெருமானுக்குப் பரமபதம் திருப்பாற்கடல், திரு வரங்கம், திருமலை, காஞ்சி முதலான உகந்தருளின இடங்களில் இருப்பதைவிட மெய்யடியாருடைய இதய கமலத்தில் வாழ்வதே பெருவிருப்பாக இருக்கும் என்பதும், செவ்வியறிந்து அன்பர்களுடைய நெஞ்சில் குடியேறுவதற்காகவே மற்ற திவ்விய தேசங்களில் எம்பெருமான் வந்து தங்குகின்றான் என்பதும் வைணவர்களின் நம்பிக்கையாக இருந்துவரும் கருத்துகளாகும். அதாவது எம்பெருமான் பரமபுருஷார்த்தமாகக் கொள்ளும் பக்தருடைய இதயவாசத்தை அடைவதற்குத் திவ்விய தேச வாசத்தை ஒரு வழியாகக் (உபாயமாகக்) கொள்ளுகின்றான் என்பது தாற்பரியம். இதனையே பிள்ளை உலக ஆசிரியர்,

“அங்குத்தை வாசம் சாதனம்;
இங்குத்தை வாசம் சாத்தியம்”[1]

(சாதனம்-பயனை அடைவதற்குத் துணையாக இருப்பது; சாத்தியம் - அதனால் அடையும் பயன்)

என்று அருளிச் செய்துள்ளார். ‘அங்குத்தை’ என்றது, அவ்விடத்தில் என்றபடி, அஃது ஈண்டுத் திவ்விய தேசங்களைக் குறிக்கின்றது. ‘இங்குத்தை’ என்பது இவ்விடம். இது, இங்கு ஞானியருடைய திருவுள்ளங்களைக் குறிக்கின்றது. இங்ஙனம் நம் சிந்தையில் சில தத்துவக் கருத்துகள் குமிழியிட்ட வண்ணம் வரதராசர் சந்நிதியிலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் பூதத்தாழ்வாரின்,

“நாகத் தணைக் குடந்தை வெஃகாத் திருஎவ்வுள்
நாகத்தனை யரங்கம் பேரன்பில்-நாகத்(து)
அணைப்பாற் கடல்கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தன் ஆவான்”[2]

  1. ஶ்ரீவச பூஷ - 176 (புருடோத்தமநாயுடு அவர்களின் பதிப்பு)
  2. நான். திருவந் - 36