உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புள்ளி மயங்கியல் 195

   இனி, னகர வீற்றுள் அழன் என்ற சொல்லின் இறுதியி லுள்ள ணகரம் கெட வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும் என்பது,
     அழனெ சிறுதிகெட வல்லெழுத்து மிகுமே. (தொல்.354) 

என்பதனாற் கூறினார்.

     (உ-ம்) அழன் + குடம் = அழக்குடம், சாடி, தூதை, பானை எனவரும். அழன் - பிணம்.

3. ஈறு கெடாது மிக்கு முடிவன

     வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வரும் ய, ர,  மெய்யீற்றுப் பெயர்கள் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து அல்வல்லெழுத்து மிக்கு முடிவனவாகும். இம்முடியினை, 
     யகர விறுதி வேற்றுமைப் பொருள்வயின் 
     வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே.     (தொல்.357)
     ரகார விறுதி யகார வியற்றே. (தொல்.362) 
     ழகார விறுதி ரகார வியற்றே. (தொல்.383) 

என வரும் சூத்திரங்களால் தொல்காப்பியனார் மாட்டெறிந்து கூறியுள்ளார்.

(உ-ம்) நாய் + கால் = நாய்க்கால், செவி, தலை, புறம்

       தேர் + = தேர்க்கால், செலவு,  ”      ”       ”
       பூழ் +  = பூழ்க்கால், செவி,   ”      ”        ”


எனவரும்.

   மேற்குறித்த யகாரவிற்றுள் வருமொழி வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் என விதந்துரைக்கப்பட்ட தாய்’ என்னுஞ் சொல்முன் மகனது வினையைக் கிளந்துரைக்கும் வல்லெழுத்து முதன் மொழிவரின் முற்கூறியபடி வல்லெழுத்து மிக்குமுடியும் என்பது,
     மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே (தொல்.359) 

என்பதனால் கூறப்பட்டது.

   (உ-ம்) மகன்றாய்க்கலாம், செரு, துறத்தல், பகைத்தல் எனவரும்.
   மகன்றாய்க்கலாம்-மகன் தாயொடு நிகழ்த்திய கலகம் எனப் பொருள் விரித்துரைக்க, மகன் வினை என்றது, ஈண்டுப் பகை மேற்று என்பர் நச்சினார்க்கினியர்.