பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை
பேரா.ச. அறவணன்
பேராசிரியர் பயிற்சிக் கல்லூரி
புதுவைப் பல்கலைக் கழகம்.

‘தொல் திராவிட மொழி - கண்டு பிடிப்பு’ என்னும் நூலில் ஆசிரியர் சுந்தர சண்முகனார் ஒரு புது முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

தமிழ் முதலான திராவிட மொழிகட்கு அப்பாற்பட்ட தாய், அவை அனைத்திற்கும் தாயாய்த் தொல் திராவிட மொழி ஒன்று இருந்தது - அது இப்போது கிடைக்கவில்லை - மறைந்து விட்டது - என்பதாகச் சிலர் கூறுவதை ஆசிரியரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை போலும் .

மறைந்து விட்டதாகச் சிலரால் கூறப்படும் தொல் திராவிட மொழி இதுதான் என்று தாம் ஒரு மொழியைக் கண்டு பிடித்துவிட்டதாக ஆசிரியர் இந்நூலில் கூறியுள்ளார். நூலைப் படிப்பவர்கள் பின்னர் அதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆசிரியர் இந்நூலில் சுமார் இரண்டாயிரம் தமிழ்ச் சொற்கட்கு நேராக, ஒலிப்பிலும் பொருளிலும் ஒத்துள்ள தெலுங்கு - கன்னடம் - மலையாளம் ஆகிய மொழிச் சொற்களைப் பட்டியல் போட்டுக் காட்டியுள்ள அரக்கப் பெரு முயற்சி மிகவும் வியந்து பாராட்டத்தக்கது.

பல ஆராய்ச்சி நூல்கள் எழுதிப் பழக்கப்பட்ட ஆசிரியரின் ஆய்வுத்திறன் இந்நூலில் மேலும் கூர்மை பெற்றுள்ளது, ஆசிரியரை எவ்வளவு பாராட்டினும் தகும்.

ச. அறவணன்
25-11-1988