பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



ஆனால், கண்களால் காண முடியாதவற்றை விஞ்ஞானம் நம்புவதில்லை. கண்களால் காண முடியும் என்பனவற்றைப் பற்றிய ஆராய்ச்சியும் - தேடுதலும்தான் விஞ்ஞானத்தின் அடிப்படை.

எனவே, விளைவுகளை ஆராயும் விஞ்ஞானத்தின் முன்பு தத்துவ ஞானம் மங்கி இருந்தாலும்கூட, காரணங்களை வினாக்களாக எழுப்பும் தத்துவ ஞானத்தின் சிந்தனையாலும், விளைவுகளை விளக்கும் விஞ்ஞானச் சிந்தையாலும், தனது செயல் ஒவ்வொன்றையும் அறிவது எப்படி? என்ற எண்ணத்தால் புரிந்து செயல்பட்டு, தொழிற்சாலை, விவசாயம், கல்வி, மருத்துவத் துறைகளில் தனது சாதனைகளுக்குச் சான்றுகளாக தொழிற்சாலை களை, கல்விக் கோட்டங்களை, விவசாயப் பண்ணைகளை மற்ற எல்லா உலக விஞ்ஞானிகளையும் விட ஜி.டி. நாயுடு அடையாளங் களாக நிறுவிக் காட்டி, அவை இயங்கவும் வழிகாட்டி மறைந்தார்.

தாம் கண்டுபிடித்தவைகளை உலகுக்குக் கொடைகளாக வழங்கிவிட்டு மற்ற விஞ்ஞானிகள் மறைந்தார்கள்! ஆனால், நமது நாயுடுதான் தனது கண்டுபிடிப்புகளை, தனது உயிர்வாழ் காலத்திலேயே இயக்கி, மக்களையும் - அதன் மூலமாக வாழவும் வைத்தார். அதற்கு அவர் நிறுவிய பல்துறை தொழிற்சாலைகளே சான்றுகளாகும்.

'உழைப்பின் வார உறுதிகள் உளவோ?' என்ற மெய்ப் பொருளுக்கு ஏற்றவாறு, "உழைப்பாளர்கள் எவரும் உயர் வாழ்வை அடைவார்கள்" என்ற உண்மைக்கு இலக்கணமாக உழைப்பின் சின்னமாக வாழ்ந்து காட்டியவர் ஜி.டி.நாயுடு அவர்கள்.

அந்த மேதையின் அறிவாற்றலை, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான, சர்.சி.வி. இராமன் மட்டுமன்று, உலக நாடுகளின் அறிஞர்கள் எல்லாம் பாராட்டி வியந்தார்கள். ரேசண்ட் பிளேடு தொழில் போட்டியில் போட்டிப் போட்டுத் தோற்றார்கள்; உலக நாடுகளில் தமிழன் பெருமையை நிலை நாட்டிப் புகழ் பெற்றார் திரு.ஜி.டி. நாயுடு அவர்கள். அத்தகைய ஒரு தொழிலியல் விஞ்ஞானி ஒருவர் பற்றிய நூல்தான் இந்த நூல்!

வள்ளலார் நூலகம் இந்த நூலை வெளியிடுவதில் பெரும் பேறு பெறுகிறது. தமிழ்நாடும்; தமிழ்ப் பெருமக்களும் இந்த வரலாற்று நூலுக்கு ஆதரவு காட்டுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.

என்.வி. கலைமணி