கலைஞரின் சட்டமன்ற உரைகள்
175
அந்தப் பணம் கட்டாத சூழ்நிலையிலேதான், சட்டரீதியான நடவடிக்கையை இந்த நிறுவனம் எடுக்க நேர்ந்தது என்பதையும் நான் எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
தமிழகத்தைப் பொறுத்தவரையிலே, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே, தொழில்துறை வளர்ந்ததா என்பதை ஒரு கேள்விக்குறியாக்கி, வளரவில்லை என்ற ஒரு தவறான பிரச்சாரம், நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நான் அதற்குச் சொல்லக்கூடிய சில விளக்கங்கள், யாரையும் புண்படுத்தாது என்று கருதுகிறேன். ஏனென்றால், 1967ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த நேரத்தில், தமிழகத்திலே இயங்கிவந்த, தூத்துக்குடி துறைமுகத் திட்டம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் முதலிய பொதுத்துறை நிறுவனங்கள் விரிவாக ஆக்கப்படவும், உற்பத்தியை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புக்களைப் பெருக்கவும், தக்க வகையில் மத்திய அரசை வற்புறுத்தியதோடு, மாநில அரசின் சார்பில் அத்தகைய ஏற்பாடுகளுக்கான, தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம். நெய்வேலியிலே, இரண்டாவது சுரங்கம் வெட்டப்படவும், சேலம் இரும்பாலை அமைக்கப்படவும், மத்திய அரசோடு தொடர்ந்து போராடி, அவை நிறைவேற்றப்படுவதற்கு வழிவகுத்தது திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என்பதை நாடு மிக நன்றாக அறியும்
தூத்துக்குடியிலே, இன்றைக்கு உலக நாடுகளெல்லாம் பாராட்டக்கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கின்ற, ஆயிரம் அல்லது இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பீடு என்று சொல்லத்தக்க அளவுக்குள்ள 'ஸ்பிக்' உரத் தொழிற்சாலை, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலேதான் நிறுவப்பட்டது என்பதையும் யாரும் மறந்துவிட இயலாது.
அதைப்போல, கழக ஆட்சிக் காலத்திலேதான், பொதுத் துறையின் மூலம் உருவாக்கப்படும் தொழிற்சாலைகள் மாத்திரம், தமிழகத்திலே தொழில் வளர்ச்சியை விரிவுபடுத்த முடியாது என்ற எண்ணத்தோடு, ஆர்வமிக்க தொழில் முனைவர்களை உற்சாகப் படுத்த, ஊக்கப்படுத்த, தொழில் வளாகங்களை அமைத்து, குறைந்த விலையிலே இடங்களை ஒதுக்கீடு செய்திட, தொழில்