246
தொழில்துறை பற்றி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் பேசிய டாக்டர் செல்லக்குமார் அவர்கள் ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார். Best and Crompton கம்பெனியின் Urban Land Ceiling சம்பந்தமான கோப்பு 10 மாத காலமாக ஏன் உறங்குகிறது, அதிலே மறைந்து கிடக்கின்ற மர்மம் என்ன என்றெல்லாம் கேட்டார். “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னவோ" என்பது தில்லானா மோகனாம்பாளிலே நான் கேட்ட பாட்டு. தம்பி செல்லக்குமாரும் அதைக் கேட்டிருப்பார், ஆர்வத்தோடு பார்த்திருப்பார் அதை. ஆகவே, இதிலே எந்த மர்மமும் கிடையாது. ஒரு கோப்பு சில நாள் தங்கி விடுகின்ற காரணத்தாலே, இதிலே மர்மம் இருப்பதாகக் கருதிவிடக் கூடாது. இதிலே என்ன பிரச்சினை என்றால், அவர்கள் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு மேலாக, அங்கே உள்ள surplus vacant land-ஐ விற்றுவிட வேண்டுமென்று அனுமதி கேட்டார்கள். அதற்கு ஒரேடியாக ஒரு அதிகாரியோ, ஒரு அமைச்சரோ உத்தரவு போட்டு விட முடியாது. முதலமைச்சரேகூட உத்தரவு போட முடியாது. அது மிகத் தேவை, பொது நலனுக்கு உகந்தது என்றால் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டித்தான் அந்த முடிவெடுக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் அப்படித்தான்.
அவருக்கே தெரியும். காங்கிரஸ் மைதானத்திலே 22 மாடிக் கட்டடம் கட்டுவதற்கு அறங்காவல் குழுத் தலைவராக உள்ள சி. சுப்பிரமணியம் அவர்கள் எனக்குக் கடிதம் எழுதினார்கள். அதில்கூட 10 மாதம் ஆயிற்று. 10 மாதம் ஆயிற்றே, இடையிலே என்ன மர்மம் என்றா என்னைக் கேட்பது? அப்படி சி.எஸ்.ஸூம் என்னைச் சந்தேகித்து விட மாட்டார், நானும் அப்படிச் சந்தேகத்திற்கு உரியவனாக இருக்க மாட்டேன் என்பது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைவருக்கும் மிக நன்றாகத் தெரியும். ஆனாலும் அந்த அனுமதியைக் கொடுப்பதற்கு அமைச்சரவையைத்தான் கூட்டினோம். நானாக ஒரு கையெழுத்துப் போட்டு, கொடுத்து விட்டோம் அனுமதியை என்று சொல்லவில்லை. புதிதாக ஒரு கொள்கை நிலை எடுக்கும் பொழுது, அமைச்சரவைக் கூட்டத்திலேதான் அந்த நிலையை எடுக்க வேண்டியிருக்கிறது.