கலைஞரின் சட்டமன்ற உரைகள்
269
தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பம் வேகமாக வளர்ச்சி அடையவும், அதற்கான அணுகுமுறைகளை உருவாக்கிச் செயல்படுத்தவும், முதலமைச்சர் தலைமையிலே I.T. Task Force ஒன்று உருவாக்கப்பட்டதையும் உறுப்பினர்கள் அறிவீர்கள்.
அரசு தகவல் தொழில் நுட்பத்திற்கென்று, தனியே கொள்கை (I.T.Policy) ஒன்றை உருவாக்கி அறிவித்துள்ளது. இக் கொள்கை, தகவல் தொழில் நுட்பத் தொழில் முனைவோர் களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பழைய மாமல்லபுரம் சாலையில் சிறுசேரி என்ற இடத்தில் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருள் (Software) வளர்ச்சிக்கு பன்னாட்டுத் தரத்தில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா ஒன்றை சிப்காட் நிறுவனம் உருவாக்கிக் கொண்டு வருகிறது. சென்னையில் தரமணியிலிருந்து பழைய மாமல்லபுரச் சாலை வரையிலான பகுதி, தகவல் தொழில் நுட்ப நெடுஞ்சாலையாக (I.T. Super Highway) விரைந்து முன்னேறி வருகின்றது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீபத்தில் சோழிங்கநல்லூரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்னும் நிறுவனம், ஆசியாவின் மிகப் பெரிய மென்பொருள் மையத்தைத் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து மற்ற மிகப் பெரிய நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ் மற்றும் பொலாரிஸ் ஆகியவை தங்களது மையங்களை அந்தப் பகுதியிலே நிறுவி வருகின்றன.
“வோர்ல்ட்டெல்” நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு நாம் ஆற்ற இருக்கின்ற அந்த அரும்பணியின் மூலமாக இலட்சத்து ஐம்பதாயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு தமிழகம் முழுவதும் கிடைக்கும் என்று ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். அது, எந்த நிறுவனத்தின் சார்பாக இருந்தாலும்கூட, அதை விரைவுபடுத்தி, இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவதையும், தமிழகம் முழுவதும் இணைய மயமாக ஆகின்ற அந்த விஞ்ஞானப் புதுமையையும் இந்த அரசு உங்கள் ஆதரவோடு செய்து காட்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).