உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

311

விவாதிக்க”, என்று கேட்டிருக்கிறார். இது மிக மிக முக்கியமான ஒன்று. ஹுண்டாய் தொழிற்சாலை அமைந்தபோதே, அதை அமைக்கவந்த கொரியா நாட்டைச் சேர்ந்த அந்த அதிபர்களிடத்திலே, நான் முதலில் போட்ட நிபந்தனை, இந்த வட்டாரத்திலுள்ள உள்ளூர்க்காரர்களுக்கு வேலைகொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துத்தான், அந்தத் தொழிற்சாலைக்கான அனுமதியை அளித்தேன் அப்பொழுது. எனவே, இது ஒரு நல்ல நிபந்தனை. இந்த நிபந்தனை ஏற்கப்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையிலே தான், தொழிற்சாலைகள் அமையும்

திரு. கோவை தங்கம், சின்கோனா மரத் தொழில், அந்தப் பகுதியிலே விரிவடைய வேண்டும் என்று கேட்டிருக்கின்றார். C.P.I.-ஐச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி திரு. உலகநாதன், "திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதியில், அரிசியைப் பயன்படுத்தி, wine தொழிற்சாலை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, விவாதிக்க” அவர் வெட்டுத் தீர்மானம் கொடுத்திருக்கின்றார். அரிசியிலே wine-ஆம்! அதைத் தயாரிக்க வேண்டுமாம்! (சிரிப்பு). நாம் இப்பொழுதுதான் அரிசியை இரண்டு ரூபாய் விலைக்குக் கொடுப்பதற்குப் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். (மேசையைத் தட்டும் ஒலி). அதிலே, wine-உம் தயாரித்துவிட்டால் என்ன ஆவது என்பதையெல்லாம் தீர யோசித்து, பரிசீலித்து, அதுபற்றி முடிவெடுக்கப்படும் என்று நான் அவருக்குச் சொல்லிக்கொள்கின்றேன்.

திரு. ஜி.கே. மணி, மேட்டூர்; "தமிழகத்திலே உள்ள அனைத்துச் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை, உடனே வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து" - அவர் அதை இப்போது எதிர்பார்க்கிறார். - “உடனடியாகக் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டிருக்கிறார். நிச்சயமாக அரசு அதற்கான நடவடிக்கையைக் கடுமையாக எடுக்கும் என்று நான் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).