பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144வல்லிக்கண்ணன்

 டிருந்த போதிலும், அவன் பி. ஆனந்தன் என்றோ, பி. ஏ. தன் என்றோ தன்னுடைய பெயரைச் சுருக்கிக் கொள்ள ஆசைப் பட்டானில்லை.

ஆனாலும், மற்றவர்கள் அவனை அவரவர் இஷ்டம் போலவும் சவுகரியம் போலவும் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்கள். 'பரி' என்று அழைத்தார்கள் பலர். "பூரணம் என்றார்கள் சிலர். 'ஆனந்த்' என்றும், 'ஆனந்தன்' என்றும், 'ஆனந்தா' என்றும் கூப்பிட்டார்கள் அநேகர். ஒருவன் மட்டும் பரிபூரண ஆனந்தன் என்று வாய் நிறைய உச்சரிப்பது வழக்கம். அவனையே தன் அருமை நண்பனாக மதித்தான் ஆனந்தன்.

படிக்கிற காலத்திலேயே, அவன் அனைத்துக் காரியங்களையும் முழுமையாகச் செய்வதில், சுத்தமாகவும் ஒழுங்காகவும். சரியாகவும் செய்து முடிப்பதில் அதிக அக்கறை காட்டினான். இந்தப் பழக்கம் பிற் காலத்திலும் நிலை பெற்று வளர்ந்தது.

"எடுத்த காரியம் எதுவானாலும், அதை பெர்பெக்ட் ஆகச் செய்து முடிக்கணும், இது என் 'பிரின்சிபிள்' என்று அவன் அடிக்கடி சொல்வது வழக்கம், சொல்கிறபடி செய்வது அவனுடைய பழக்கம்.

வேலை பார்க்கிற இடத்தில், பலரும் கடியாரத்தைப் பார்த்தபடி இருப்பார்கள், ஐந்து மணி ஆகி விட்டதா என்று அடிக்கடி உற்று நோக்குவார்கள். ஐந்து ஆவதற்கு ஐந்து நிமிடங்கள் இருக்கிற போதே, செய்த அலுவல்களை அப்படி அப்படியே போட்டு விட்டு, "அவசரம் ஒண்ணும் இல்லே. நாளைக்குச் செய்யலாம்: என்று மேசையின் இழுப்பறைக்குள் தள்ளிப் பூட்டி விட்டு, கிளம்புவதற்கு ரெடி ஆகி விடுவார்கள். டாண் என்று ஐந்துக்கெல்லாம் மிடுக்காக வெளியே நடப்பார்கள்.