உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நக்கீரர்.djvu/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை.

மேனாட்டு ஆங்கிலப் புலவர்களின் வரலாறுகளைப் பல ஆராய்ச்சி வல்லுநர்களைக்கொண்டு எழுதுவித்து லார்டு மார்லி துரைமகனார் வெளியிட்டுள்ளனர். அங்ஙனமே, தமிழ்ப் பெரும் புலவர்களின் வரலாறுகளை, அவர்களின் நூலாராய்ச்சிகளுடன், அறிவிற் பெரியவர்களைக்கொண் டெழுதுவித்து, வெளிப்படுத்த வேண்டுமென்பது நம் தமிழ்ச் சங்க நோக்கங்களிலொன்று.

இதனைத் தொடங்குவதற்குச் சில ஆண்டுகளின் முன்னரேயே ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், ஆங்கிலப் புலவர் வரலாறுகளைப்போலத் தமிழ்ப் புலவர் வரலாறுகளை எளிதிற் றுணிதற்குப் போதிய துணைக் கருவிகளின்மையானும், பிறவற்றானும் அதனை நிறைவேற்றுவதில் காலந் தாழ்க்க நேர்ந்தது.

வழிவழிப் போந்த கட்டுரைகளோடு கூடிய விவரங்களிலிருந்து உண்மைப் பொருள்களைப் பிரித்துக் காண்டல் எளிதானதாயில்லை. எனினும், கிடைக்கும் துணைக் கருவிகளைக்கொண்டு துருவி, ஆராய்ச்சியிற் பெறப்படும் பொருள்களை வெளியிட வேண்டுமென்பதே நம் கருத்தாகும்.

இக் கருத்துக் கியையவே, எம் வேண்டுகோளின்படி, பண்டிதர் திரு.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள், கடைச்சங்கத்து முதன்மை யுற்றிருந்த நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவரின் வரலாற்றை வரைந்து தந்துள்ளார்கள். இதுவே புலவர் வரலாறு வரிசையில் முதலதாக வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நக்கீரர்.djvu/4&oldid=1092643" இலிருந்து மீள்விக்கப்பட்டது