நக்கீரர்.
_____
முதலாம் அதிகாரம்.
_____
நக்கீரர் வரலாறு.
_____
முன்னுரை.
நக்கீரர் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டு வந்த பழங்குடியினரான முடியுடைத் தமிழ்வேந்தர் மூவருள்ளே ஈண்டிய சிறப்பிற் பாண்டியரானோர் வழி வழியமர்ந்த பழவிறன் மூதூராகிய பீடுமிக்க மாடமதுரையிற் சங்கமிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப்புலவர் குழாத்துட் பல்லிசை நிறுத்த படிமையோராவர். இவர், குடிப்பிறப்பாகிய உடையுடுத்துக, கல்வியாகிய மலர்சூடி, ஒழுக்கமென்னும் விழுக்கலன் பூண்டு, வாய்மையென்னு முணவுண்டு, நடுவுநிலையென்னும் நகரின்கண் தூய்மையென்னும் ஆதனத் தமர்ந்து, அழுக்காறின்மை, அவாவின்மை யெனப்படும் இரு பெரு நிதியமும் ஒரு தாமீட்டுந் தோலா நாவின் மேலோராகித், தமக்கொப்பாரும் மிக்காருமில்லையாக விளங்கினரென இவரது வரலாறு கூறாநிற்கும். அக்காலத்துப் புலவரெல்லாரும் பாட்டியற்றிய மட்டிற் பெயர் சிறந்தாராக, இவர், பாட்டுப் பல் புனைந்ததன்றி, ஆலவாய்ப் பெருமா னடிகளருளிய பொருணூலுக்குப் பொருள் காணாது மயங்கிய யாவருந் தெருளுறுமாறு சிறந்ததோருரைகண்டு புகழ்சிறந்து விளங்கினர். அவ்வுரை பின்னுளோ ருரைகட்கெல்லாம்