பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

175


சொந்தப்படம் எடுக்கணும்'னார்; ‘பணம் ?'னேன். ‘நான் வேணும்னா என்னால் முடிஞ்ச வரையிலே உதவறேன்'ன்னார். அதுக்கு மேலே என் கம்பெனி மானேஜர் சாமண்ணாவை விட்டு அவரோடு பேரம் பேசச் சொன்னேன். எல்லாம் பேசி முடிச்சாச்சி. தேனாம்பேட்டை போயஸ் ரோட்டிலே கம்பெனிக்குன்னு ஒரு வீட்டைப் பிடிச்சி, ‘எம்.ஆர்.ஆர்.புரெடக்ஷன்ஸ்’னு சொந்தமாகவே ஒரு பிலிம் கம்பெனி ஆரம்பிச்சேன். காமராஜ்தான் திறந்து வைச்சார். கிருஷ்ணன் பஞ்சுவின் டைரக்ஷன்லே ‘ஆளப் பிறந்தவன்'னு படம் எடுக்கிறதா திட்டம் போட்டோம். எனக்கென்னவோ ஒரு நாடகக்காரர் எடுக்கிற படத்துக்கு நாடகத்திலே அனுபவமுள்ள இன்னொரு நாடகக்காரர் டைரக்டராயிருப்பது தான் நல்லதுன்னு பட்டது; கிருஷ்ணன் பஞ்சுவை நீக்கிவிட்டு ஏ.பி.நாகராஜனை டைரக்டராப் போட்டேன். சீனிவாசராகவனின் ரேவதி ஸ்டுடியோவிலே படப் பிடிப்பை ஆரம்பிச்சோம். அப்போ ‘ரத்தக் கண்ணீர் பெருமாள் முதலியா'ரும் வந்து எனக்குப் பண உதவி செய்தார்.”

“அவருக்கும் உங்களுக்கும் ஏதோ தகராறுன்னு வெளியே சொல்லிக்கிட்டிருந்தாங்களே ?”

“அது உண்மையில்லேங்கிறது உங்களுக்கெல்லாம் தெரியட்டும்னுதானே இப்போ நான் அதைச் சொல்றேன் ? அந்தச் சமயத்திலே சீனிவாச ராகவன் என்னையும் பாகவதரையும் போட்டு, ராஜா சாண்டோ நடிச்ச பழைய ‘வசந்த சேனா'வை மறுபடியும் புதுசா எடுக்க நினைச்சார். நினைச்சபடியே எடுக்கவும் எடுத்தார். படத்தை எடுத்து முடிக்கிறதுக்குள்ளே பாகவதரின் கண் போயிடிச்சி; பாதியிலே நின்னுடிச்சி.”

“பாவம், சீனிவாச ராகவன் ஒலிப்பதிவில் மட்டுமல்ல, வேறு எத்தனையோ வகைகளில் அவர் வியக்கத்தக்க திறமை பெற்றிருந்தார். அப்படியிருந்தும் இப்படி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக ஏற்பட்டே அவ்வளவு சீக்கிரத்தில் அவர் மறைந்து போனார்!"