பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

விந்தன்


"பணம் அவர்கிட்டே மட்டுமா இருக்கு, எத்தனையோ பேர்கிட்டே இருக்கத்தான் இருக்கு, அவங்களுக்கெல்லாம் அந்தத் துணிச்சல் வந்துடுதா?”

“பணத்தோடு மனமும் இருந்தால்தான் வரும்”

“அப்படி வாங்க, வழிக்கு அதுதான் உண்மைங்கிறேன். அவர் பணத்துக்காகவோ, புகழுக்காகவோ சேவை செய்ய வந்தவர் இல்லே, சேவையைச் சேவைக்காகவே செய்ய வந்தவர். அதனால்தான் அத்தனை எதிர்ப்புக்களுக்கும் தாக்குப் பிடிச்சி அவராலே இமயம்போல நிற்க முடியுது. அந்த நாளிலே அவர் நடத்திய குடியரசுப் பேப்பர் விறுவிறுப்பா வித்தாப்போல் இந்நாளிலே வேறே எந்தப் பேப்பரும் வித்து நான் பார்க்கல்லே. பெரியாரைத் திட்டி எழுதறதுக்குன்னே டி.கே.பாவலர் அப்போ ஒரு பேப்பர் நடத்தினார். அதன் பேரு இப்போ எனக்கு மறந்து போச்சு. அதுவும் விறுவிறுப்பா விற்கும். குடியரசு பேப்பர் வாங்கற அத்தனை பேரும் அதையும் வாங்குவாங்க. காந்தியார் வெளிநாட்டுத் துணிங்களைத் தெருவிலே தூக்கிப் போட்டுத் தீ வைச்சிக் கொளுத்தினாபோல ‘நாங்க மேல் ஜாதிக்காரங்க'ன்னு சொல்லிக்கிட்டவங்க குடியரசுப் பேப்பரைத் தெருவிலே தூக்கிப் போட்டுத் தீ வைச்சிக் கொளுத்துவாங்க. அந்தத் தீயிலே பெரியார் பேப்பர்தான் சாம்பலாச்சே தவிர, அவருடைய கொள்கைங்க, கோட்பாடுங்க சாம்பலாகல்லே...”

“நாங்கள் மேல் சாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிலும் அவருடைய கொள்கைகள், கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள்மேல் அவர் கொண்டுள்ள துவேஷந்தான்.”

“தவறான பிரசாரம் அது. அவருக்கு எப்பவுமே நாங்க மேல் சாதிக்காரங்க'ன்னு சொல்லிக்கிட்டிருக்கிறவங்ககிட்டே துவேஷமே கிடையாது; அங்க சாஸ்திரங்க, சம்பிரதாயங்க மேலேதான்."