பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

விந்தன்


“ஹெட் கான்ஸ்டபிள் ஒருத்தர் வந்து கேட்டண்டை நின்னுக்கிட்டார். பொன்னுசாமிப் பின்ளையையோ, என்னையோ கேட்காமலேயே தனக்கு வேண்டியவங்களையெல்லாம் ‘நீ போ, நீயும் போ’ ன்னு உள்ளே விட்டுக்கிட்டே இருந்தார். நாங்க படற கஷ்டத்திலே கொஞ்ச நஞ்சம் கலெக்ஷன் ஆவறதையும் இவர் இப்படிக் கெடுத்துக்கிட்டிருந்தா எனக்கு எப்படி இருக்கும்?... நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்; பொறுக்க முடியல்லே. கிட்டே போய், ‘நியாயத்தை நிலை நாட்ட வேண்டியர்களே இந்த அநியாயத்தைச் செய்யலாமா?ன்னேன். ஷட் அப்'ன்னு அவர் ஒரு துள்ளுத் துள்ளிக் குதித்தார். ‘அப்படின்னா என்ன அர்த்தம்? உங்களை வெளியே தள்ளிக் கேட்டை மூடச் சொல்றீங்களா ? இல்லே, என் வாயை மூடச் சொல்றீங்களா ?ன்னேன். யூ ஷட் அப்'ன்னு அவர் நீட்டி முழக்கினார். அவ்வளவுதான், ‘யூ கெட் அவுட்'னு நான் அவர் கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளிட்டேன். அதுக்கு மேலே கேட்கணுமா ? அவர் அடிக்க, நான் அடிக்க, ஒரே அடி தடிச் சண்டை, கலாட்டா எல்லாம் வந்துட்டுது. அதோடு ‘அரெஸ்ட் ஹிம், அரெஸ்ட் ஹிம்’னு கூச்சல் வேறே!”

“யாரை யார் அரெஸ்ட் செய்யச் சொன்னார்கள் ?”

“என்னைத்தான் ஹெட் கான்ஸ்டபிள் அரெஸ்ட் செய்யச் சொன்னார். ஆனா அவரோடு வந்திருந்த போலீஸ்காரர்களோ அவருக்கு அடி விழுந்ததும் ஓடிட்டாங்க!”

“அப்புறம் ?”

“போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயா இருக்கு, வேறே போலீஸ்காரர்களைக் கூட்டிக்கிட்டு வந்து என்னை அரெஸ்ட் செய்ய?... அது இப்போதைக்கு முடியாது, பொழுது விடிஞ்சாத்தான் முடியுங்கிற நிலைமை.”

“ஹெட் கான்ஸ்டபிள் என்ன செய்தார் ?"