பக்கம்:நனவோட்டங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 139 கெட்டவன் என்று பிரித்துக்காண்பது அரிது என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். என்னைப் போன்றவர்களை வைத்துத்தான் அவர் அப்படிக் கூறி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நல்லவன் கெட்டவன் ஆவதற்குச் சில சமயம் நெடுநேரம் ஆவதில்லை என்று சொல்வார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. கெடுவதற்கு வேண்டிய சூழ்நிலை என்னுள் உருவாகி இருந்தது. அதைப்பற்றி நான் நினைத்துப் பார்க்காமல் போய்விட்டேன். நான் 'கெட்டவன் தான் என் மனத்தை அவ்வளவு தூரம் சிதறவிட்டிருக்கக்கூடாது. யாரும் இந்நிகழ்ச்சிக்குப்பின் அப்படித் தான் சொல்வார்கள் ஏன் என் மனச் சான்றும் அப்படித் தான் கூறுகிறது. வள்ளுவர் பிறன் மனை நயவாமை என்ற அதிகாரத்தை எழுதி வைத்தார். அவள் பிறனுடைய மனைவியா? அந்த உடைமை அவனை விட்டு எப்பொழுதோ போய் விட்டது. வேலி நீங்கிய வயல் சில சமயம் காவல் இல்லாமல் போய்விடுகிறது. என் உவமை நான் நினைத்தது நியாயமா? என்று கூற உதவாது. அப்பொழுது நான் வயலில் புகுந்துவிட்ட மாடா? சே! எவ்வளவு கீழ்மை என்னிடம் இடம்பெற்று விட்டது. பழையகாலத்து நாவலாசிரியராக இருந்தால் இந்த மனச் சான்றை வைத்தே ஆயிரம் பக்கங்கள் எழுதி இருப்பார்கள். நாடகத் தனி மொழியாக இருந்தால் கூட்டம் கலையும் வரை பேசி வெறுக்கச் செய்து விடுவார்கள். அவள் என்னை விரும்பியது தவறா? அவள் நெஞ்சி லிருந்து அவனை அகற்றிவிட்ட பிறகு அவனுக்கு அங்கே இடம் ஏது? வெறுங்கோயில் பாழடைந்து விடாதா? அதில் ஒரு கற்சிலையை வைத்தால் தானே அந்தக் கோயில் மறுபடியும் பொலிவு பெறும். அந்தச் சிலையாக அவள் என்னை மதித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/141&oldid=772856" இலிருந்து மீள்விக்கப்பட்டது