பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117



குதிரை ஒன்று என்னிடம் இருக்கிறது. அதன்மீது ஏறி வந்து உம்மை நான் கொல்வேன்” என்று கூறிச் சென்றவர்.

பெருமானார் அவர்கள் “இல்லை, ஆண்டவனுடைய நாட்டம் இருந்தால், நீ என்னுடைய கையினால் கொல்லப்படுவாய்” என்று அப்போது சொல்லி இருந்தார்கள்.

அத்தகைய உபை இப்னு கலப், பெருமானார் அவர்களை நெருங்கி வருவதைக் கண்ட தோழர்கள் அவரைத் தாக்குவதற்கு முன்னே சென்றனர்.

ஆனால், அவர்களிடம் பெருமானார், “நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்; அவர் என்னிடம் வரட்டும்” என்று கூறி, அருகில் நின்ற தோழரிடமிருந்து ஈட்டியை வாங்கி, முன்னே சென்று அவரைக் குறி வைத்து வீசினார்கள். அந்த ஈட்டி அவருடைய உடலில் பட்டதும் விலா எலும்பு முறிந்து விட்டது. குதிரையின் மீது இருந்தபடியே தள்ளாடிக் கூச்சலிட்டுக் கதறிக் கொண்டு குறைஷிகள் இருக்கும் இடத்துக்கு ஓடினார்.

அவருடைய ஒலத்தைக் கேட்ட தோழர்கள், “தோழரே, காயம் அவ்வளவு பலமாக இல்லையே?” என்று கேட்டனர்.

“எனக்கு இருக்கும் வேதனையை இங்குள்ள எல்லோரும் பங்கிட்டுக் கொள்வார்களானால், எல்லோருமே மடிந்து போவார்கள். முஹம்மது தம்முடைய கையினாலே என்னைக் கொன்று விடுவதாக முன்னரே சொல்லியிருந்தார். அவருடைய எச்சிலை என்மீது உமிழ்ந்தாலும், ஆண்டவன் சத்தியமாக நான் தப்பிக்க இயலாது” என்று சொன்னார்.

அவர் மக்காவுக்குத் திரும்பிப்போகும் வழியில் மாண்டு விட்டார்.


90. திருமுகத்தில் இரத்தம் பீறிடுதல்

போரில் பெருமானார் அவர்கள் உயிர் துறந்து விட்டதாக, மதீனாவுக்குச் செய்தி எட்டி, அங்கிருந்தோர் பெருமானாரைக் காண்பதற்காக ஓடோடி வந்தனர்.