மே தினங்களில் அண்ணா
வைகாசியில் கருடசேர்வை, ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பூர உற்சவம், ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகையில் தீப விழா, மார்கழியில் திருவாதிரை, தையில் பூசம், மாசியில் மகம், பங்குனியில் உத்திரம், சித்திரையில் பௌர்ணமி இப்படி மாதந்தோறும் ஒவ்வொரு திருவிழா நடத்தி, தலைமுறை தலைமுயைாகப் பழக்கபட்ட மக்களிடையே, மே தின விழாக் கொண்டாட முற்பட்டிருக்கிறோம். மே விழா, மேதினியில் மக்களுக்கு வாழ்வளிக்கும் விழா என்று கூறினால், மக்கள் சுலபத்தில் நம்பமாட்டார்கள்; ஆச்சரியப்படுவார்கள். நாட்டு மக்களிலே, சிந்திக்க கற்றுக்கொண்ட பகுதியினருக்கு மட்டுமே, மே தின விழாவின் முக்கியத்துவம் தெரியும். மற்றவர்கள், இன்னமும் நான் முன்னால் குறிப்பிட்ட பல்வேறு திருவிழாக்களிலேயே ஈடுபடுவர்கள்—குடும்பம் குடும்பமாக! பாட்டாளி மக்களின் விடுதலை விழா மே தினம். நாடு அல்ல இதற்கு எல்லை! பாட்டாளிகள், வாழ்வுக்காக—விடுதலைக்காக—உரிமைக்காக மேதினத்தைக் கொண்டாடுகின்றனர். நாளொன்றுக்கு 8 மணி நேரம் உழைப்பது, 8 மணி நேரம் குடும்பத்தினருடன் குதூகலமாக வாழ்வது மற்ற 8 மணி நேரம் ஓய்வாக இருப்பது—இந்தத் திட்டத்தை, மே தினம் எடுத்துக் கூறுகிறது. பாட்டாளிக்குப் புது வாழ்வு அமைய வேண்டுமானால், இந்தத் திட்டம் தேவை.