உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

ஒரு கண்ணாம் சூரியன் எழுகின்றான். ஒருங்கு நிற்கும் இருகண் என இவை தோன்றுகின்றன. கதிரவனார் ஒளி பட்டதும் புத்துயிர் பெற்று உலகம் எழுகிறது. பறவைகள் பாடுகின்றன. விலங்குகள் மூரிவிட்டெழுகின்றன. மக்கள் தத்தம் தொழிலின்மேல் செல்கின்றனர். ஒளிகுன்றி இருட்டிக்கிடந்த உலகம், பல பல நிறங்களுடனும் பலபல வடிவங்களுடனும், மெல்ல மெல்லப் பனிப் படலத்திரையை நீக்கிக்கொண்டு தோன்றுகிறது.

இவ்வாறு எல்லோரும் ஒன்றாக விழித்து, ஒன்றாகப் புற இருள் நீங்கப்பெற்று விளங்குகின்றனர்; எல்லாம் விளங்குகின்றன. இப்படி, ஓர் ஒற்றுமை எங்கும் வெளியாகிற வியப்பில் நாம் மூழ்குகிறோம். இந்த அற்புதச்சக்தி, கதிரவனாய் எதிரே வடிவம்கொண்டு, நம்மை வாழ்வித்துக் காட்சி அளிக்கிறது. அம்மட்டுமா? குழவிப் பருவம்முதல் நாம் வளர்ந்த வளர்ச்சியும், நாம் அறிவோம் அன்றோ? கருவிலிருந்த குழவிக்கும் கம்பனுக்கும் என்ன வேற்றுமை! என்ன வேற்றுமை! புன்னுனைப் பனிபோல நின்ற உயிர்ச்சாறு, கம்பராய், வள்ளுவராய், சேக்கிழாராய், தொல்காப்பியராய் வளர்ந்த வளர்ச்சி, கடவுள் வளர்ச்சியே ஆம். நம் முயற்சியால் எழுந்ததோ நம் வளர்ச்சி? நாம் அறிவோமா நம் மயிர்த்துளையின் எண்ணிக்கையை? தம் உடலமைப்பின் விசித்திரத்தினையேனும் முற்றும் அறிந்தோர் யார்?

இதனை வளரும் மரமும் அறியாது; நாமும் அறியோம்; சக்தியே அறியும். உலகில், எங்கும் என்றும், இந்த வியத்தகு செயலைக் காண்கிறோம். சிறுமீன் சினையினும் சிறியதான ஆலம் வித்தும், பெரியதொருமரமாய் வளர்ந்து, அரசர்கள் தம் பெரும்படையும்

108