உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

தமிழ்ச் சுவைப் பேழையை முதல் முதல் தம் உரையாம் திறவுகோல் கொண்டு திறந்தவர் அவரே என்பதனை நாம் மறத்தல் ஆகாது. முகம்புகு கிளவியின் பெருமையில் ஈடுபட்டும், உள்ளுறை இறைச்சியின் வேறுபாட்டைப் புலப்படுத்தியும், வரலாற்று ஆராய்ச்சியோடு இயைந்தும் எழுதிப்போகும் அவர் உரை நுட்பம் பெரிதும் பாராட்டத்தக்கதேயாம். முன் எல்லாம் தமிழ்ப் பெரியார் ஒவ்வொரு நூலையே வாணாள்வரை ஆராய்ந்துவருவார்கள்; பிற நூல்களைத் திறம்பெறக் கற்பதெல்லாம் தம் நூலை ஆராய்வதற்கென்றே முடியும். அத்தகைய ஆராய்ச்சித் திறமெல்லாம் நற்றிணையுரைக்குப் பயன்பட்டிருப்பது நன்கு தெளிவாகிறது. இந்நாளைய தமிழ்ப் புலவர்கள் அந்த வழியே செல்வார்களானால் மிகமிகப் பயன் உடையதாகும் என்பதில் என்ன ஐயம்?

5

அகத்திணை என்பது அன்பு வரலாறு. கடவுளும் காதலும் அன்றித் தமிழில் வேறென்ன இருக்கிறது எனச்சிலர் எள்ளி நகையாடுகிறார்கள். அவர்கள் உண்மை காணாதவர்களே. கடவுளும் தமிழ்க் காதலிலே ஒடுங்கிநிற்பதை அறிந்தால், பெருஞ் சிரிப்புச் சிரிப்பர் போலும்! அன்பே சிவம் என்பதற்குக் காதலே கடவுள் என்பதன்றோ பொருள்? கடவுளைச் சுட்டினொடு காட்ட வந்த சம்பந்தர் ஆண்நிலை மாறிப் பெண்ணாய்க் கடவுளாம் காதலன்மேல் வெறிகொண்டு, "இறை வளை சோர என் உள்ளங்கவர் கள்வன்" என்றன்றோ பாடுகிறார்! ஆழ்வார்களும் மற்றைய முதலிகளும் அத்தகைய கடவுட் காதல் கொண்டவர்களே யாவர். திருவள்ளுவர் கூறிய காமத்துப்-

130