உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

விடுவித்துக்கொண்டு வீட்டிற்குள் போய் நப்பின்னை ஒளிந்துகொள்கிறாள்.

கண்ணனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. சுற்றுமுற்றிலும் பார்க்கின்றான். ஒருவரையும் காணோம்; சிறிது தாழ்ந்து நப்பின்னையின் உயிர்த்தோழி நக்கண்ணை வருகின்றாள் ; நடந்ததனை அறிகின்றாள். "நப்பின்னை தானே வள்ளியம்மையாருக்கு முதற் பெண்! இன்று அக்காள் அக்காள் என்று நப்பின்னை ஓடியது என்ன விளையாட்டு?" என்று கண்ணன் கேட்கின்றான்.

"மணந்துகொண்டு உங்கள் ஊரிலுள்ள மரநிழலிலே நப்பின்னையுடன் விளையாடலாகாதா?" என்கின்றாள் நக்கண்ணை.

"திருமணத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டுவதுதான்! இன்றே செய்கின்றேன். காதல் வெறியில் இது தெரியாமற் போய்விட்டது. ஆனால், "அக்காள்" என்று நடுநடுங்கி ஓடினாளே! அந்தப் புதுமை யாது? எனக்கு விளங்கவில்லையே?"

"நப்புன்னை நப்பின்னையின் அக்காள் தான். வள்ளியம்மை முதலில் வளர்த்த பிள்ளை அது; தேனும் பாலும் ஊட்டி வளர்த்த பிள்ளை. எங்களைவிட நப்புன்னை அக்காள்தான் நல்லவள் என்று வள்ளியம்மையார் அடிக்கடி சொல்லுவார்கள். நாங்களும் அக்காளை மறந்த நாளே கிடையாது. அந்த அக்காள் எதிரே உங்களோடு எப்படிக் கூச்சமின்றிப் பேசுவது?" என்கிறாள் நக்கண்ணை.

"விளங்கவில்லையே !" என்கிறான் கண்ணன்.

16