உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

மாக அந்த அறையில்தான் குழந்தைகள் விளையாடுவது. அந்த அறை விருந்துக்கு உதவ வேண்டுமாகையால், குழந்தைகளும் அந்த அறைக்குள் செல்லாது உதவவேண்டும் என வள்ளியம்மையார் தம்முடைய குழந்தைகளைக் கேட்டுக்கொள்கின்றனர். அவர்களும் மனமொப்பித்தாய்க்கு உதவி செய்துகொண்டிருக்கின்றனர்.

"வெளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இது தெரியாது. அன்று பொழுது புலர்ந்ததும் குழந்தைகள் பழமைபோல அந்த அறைக்குள் புகுகின்றன. அவர்கள் வருவதனைக் கண்ட வள்ளியம்மையாரின் செல்வப் புதல்வி நப்பின்னையும் வருகின்றாள்; அவளுடைய தம்பி கீரனும் வருகின்றான். 'இந்த அறையை விட்டு வேறு இடத்தில் போய் விளையாடலாம்' என்று இவர்கள் சொல்வதற்குமுன்னரே, மற்றைய குழந்தைகள் ஓடோடியும் அறைக்குள் புகுந்து ஆடத்தொடங்குகின்றன. குழந்தைகள் உள்ளத்தைக் கவரும் பொருள்களே அங்கிருக்கின்றன. தலைகால் தெரியாமல் அவைகள் களிக்கூத்தாடுகின்றன. இரண்டொரு சால்கள் உருளுகின்றன. ஒரு சில பழங்களைக் குழந்தைகள் தம் கையில் எடுத்துக்கொண்டு வெளிவருகின்றன ஒன்றன் தோள்மேல் ஒன்று ஏறி எட்டாதஉறியையும் எட்டி வெண்ணெயையும் தேனையும் ஒன்றாக்கி உண்கின்றன; மிகுந்ததைச் சுவரின் புறத்தே பதுங்கிக் கிடக்கும் பூனைக்கும் தருகின்றன. கீரனும் நப்பின்னையும் பேசுவது ஒன்றும் அந்தக் குழந்தைகள் காதில் விழவில்லை.

"இந்த ஆரவாரத்தைக் கேட்டு வள்ளி அம்மையார் உள்ளிருந்து ஓடிவருகிறார். முருகனாரும் வருகின்றார். வள்ளியாரின் மனம் இந்தச் சீர்கேட்டைக் கண்டு எரிகிறது; முருகனாரோ குழந்தை விளையாட்டினைக் கண்டு சிரிக்கின்றார்.

18