உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எல்லாம் அவளுக்கே

கொளுத்தக் கொண்டு கொண்டது விடாத மடப்பம்—பெரு நம்பிக்கை—உறுதி—என் மேல் உறுதி—தோழி மேலும் பாயும் உறுதி—இத்தகைய நம்பிக்கையே வடிவமான பார்வை ! பார்வையில் எவ்வளவு பொருள் ஆழம்? எவ்வளவு அன்பு? எவ்வளவு இன்பம்? எவ்வளவு நம்பிக்கை?

"நெஞ்சே! இத்தகைய நோக்கம் அன்றோ நம்மை இங்கே கொண்டுவந்துவிட்டது. என் செய்வது?" என்கிறான். "அவள் நம்பிக்கை பாழாகுமா? கண்டாய் அல்லையோ இயற்கையின் போக்கினை! அவளுக்காக அன்றோ அனைத்தும்! ஆதலின், ஆறுதல் உண்டு" என்று அவன் அடிமனத்தே ஓர் எண்ணம் பூத்துக் குலுங்குகிறது; தோழியின் அடிமனத்திலும் அத்தகைய எண்ணம் பழுத்து இனிக்கின்றது.

தம் வள்ளல் மலையமானின் வீரம்...தாம் கண்ட கலை நுட்பம்....காதலின் அழகு...அறத்தின் வீறு ..இத்தனையும் தோன்ற இந்தச் சிறு கதையினைக் கபிலர் 12 வரியில் பாடியுள்ளார்:

மலையன் மா ஊர்ந்து போகிப் புலையன
பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கு அவர்
அருங்குறும்பு எருக்கி அயர்வுயிர்த் தாஅங்கு
உய்த்தன்று மன்னே நெஞ்சே ! செவ்வேர்ச்
சினைதொறும் தூங்கும் பயம் கெழுபலவின்
சுளையுடை முன்றில் மனையோள் கங்குல்
ஒலிவெள் அருவி ஒலியில் துஞ்சும்
ஊர் அல்அம் சேரிச் சீறூர் வல்லோன்
வாள் அரம் பொருத கோண் ஏர் எல்வளை
அகன்தொடி செறித்த முன்கை ஒள் நுதல்
திதலை அல்குல் குறுமகள்
குவளை உண்கண் மகிழ்மட நோக்கே.

நற்றிணை—77.

45