உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புது மணப் பெண்

"என்ன கொடுமை கண்டாய் ! காட்டுக்கு எப்போதாவது போய் இருக்கிறாயா?"

"எல்லாம் நீ கூறியதுதான் கனவில் வந்தது.', "நான் என்ன சொன்னேன்? நீ என்ன கனவு கண்டாய்?'.

"நிழலோ, மரமோ இல்லாத வெறும் வெட்ட வெளி. கண்ணுக்கு எட்டிய தொலைவு எல்லாம் வெறும் களரி நிலம்தான். நீர்ப்பசையே காணோம். நிலம் எல்லாம் இறுகிச் சுட்ட செங்கல்போலக் கெட்டியாகிப் பின் வெளியில் பிளந்துகிடக்கின்றது. பாம்பு கடித்தால் நஞ்சு தலைக்கேறுவது போலச் சூரிய வெப்பமும் 'விர்' என்று தலைக்கேறுகிறது. சூரியனும் உச்சியில் வந்து சுழலுகிறான். வெயிலின் கொடுமையால் எங்குப் பார்த்தாலும் பேய்த்தேர் அந்தரத்தில் நீரலைபோல மருட்டி ஓடுகிறது. ஒரு பெரிய யானை—பாவம்! உணவின்றி, உரம் குன்றி நிற்கிறது. சுற்றிச் சுற்றிப் பார்த்து அதன் கண் பஞ்சடைகிறது. எவ்வளவு பெரிய யானை ! ஆனால், எவ்வளவு சிறிய கண் ! அந்தக் கண்களும் பொலிவிழந்து ஒளி மழுங்கிக் கிடக்கின்றன. பேராற்றல் படைத்தும் பீடழிந்து வாடுகிறது: எப்படிக் குன்றிப் போய்விட்டது, இந்த யானை! களைத்துநின்ற நிலையில் தரை 'சுறீல்' என்று அண்டிக்கொள்கிறது. ஏதோ காலைப் பற்றிக்கொண்டதுபோலத் தோன்றவே சடுக்கெனக் காலைத் தூக்கித் தரையை ஓர் உதை உதைக்கிறது. எவ்வளவு பருத்த கால் ! என்ன உதை ! ஆ ! என்ன, ஒன்றும் தோன்றவில்லை. ஒரே மேகம் மூடிக்கொண்டதுபோல ஆய்விட்டதே ! இல்லை, இல்லை. இதோ தெரிகிறது. உதைத்த உதையால் வெளுப்புப் பூத்த களரி நிலத்தரை தூசா-

51