உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

மேனாட்டுச் சொற்களுக்கு,முறையே நேர் நேர் ஆன தமிழ்ச்சொற்கள் என்று முடிவு கட்டலாம். அகப்பாட்டு என்பது: The Poetry of the Noumenon; புறப்பாட்டு என்பது; The Poetry of the Phenomenon.

2

சங்கப் புலவர்கள் அரசியலின் உயிர் நிலையாக நின்று அரசரைத் திருத்தி அவர்களது அருட்டிருப்பேர் ஆசிரியர்களாக உள்ளூற விளங்கினர். கண்ணகி என்ற காதற்கிழத்தியைப் பேகன் என்ற வள்ளல் துறந்ததற்கு இரங்கி, இருவரையும் ஒன்றுபடுத்தி அன்பு நெறியிற் செலுத்த, எத்தனைப் புலவர் பெருமக்கள் பாடியுள்ளனர்! இத்தகையோர், தம் நாளைய வரலாற்றுக் குறிப்புக்களைத் தம் பாடல்களில் எப்படி விட்டொழிக்கமுடியும்? அன்னோர்புறவாழ்வை அன்றே அக வாழ்வாக உயர்த்த முயன்றனர்! வரலாற்றுக் குறிப்பு என்றால் என்ன? வரலாறு, இறந்த காலச்சிறப்பைத் தொடர்புபடுத்தி, உள் பொருள் விளக்கி, ஒற்றுமை காட்டும் ஒரு கலையாம். இறந்த காலத்தில் திளைத்துக் குளிப்பது மட்டும் அன்று இதன் நோக்கம். இந்த ஒற்றுமைக் காட்சியின் வழியே நிகழ் காலத்தினையும் விளக்கி, எதிர்காலக் காட்சியையும் நம் மனக்கண்ணெதிரே எழச்செய்து, அதனை நனவிலும் கண்டு அறிய வழிசெய்வதும் அக் கலையின் நோக்கமாம். வரலாறு, பல செய்திகளின் கோவையே ஆம். ஆனால், எல்லாச் செய்திகளும் நிகழ்ச்சிகளும் வரலாற்றுக் குறிப்புக்கள் ஆதலில்லை. ஊர் வழியே செல்கிறோம்; பல பல வீடுகள் கண்ணைக் கவருகின்றன. பின்னர், மலைமேல் ஏறுகின்றோம்; ஊர் முழுவதனையும் ஒற்றுமைக் காட்சியாகக் காண்கிறோம்; கண்டு-

68