உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

147


போலும் முயற்சியது என்க. மீன் வேட்டமே கருத்தாகக் கொண்ட பரதவர், அதற்கு உதவியாகும் வலையினைத் தோணியிலிட்டபின் அந்தத் தோணியை முயற்சியுடன் செலுத்திச் செல்லுமாறுபோல, நின் தலைவனும் என்னை வயப்படுத்தக் கருதினனாய் நின்னைச் செலுத்தியவனாகத் தான் பின்னிருந்து சூழ்ச்சி செய்கின்றான் என்பதாம். கடலிடை ஓடம் மதகளிறுபோல இயக்கம் பிறழ்ந்து போகா வண்ணம், குத்துக்கோற்காரர் களிற்றை அடக்கிச் செலுத்துவதுபோலச் செவ்விதாக இயக்கிச் செலுத்தும் பரதவரைப் போல, நின் தூதுமொழி தடம் பிறழாவாறு அவனும் சிறைப்புறமாக நிற்பதனை யானும் அறிந்தேன்" என்பதுமாம். ஏதிலான் – அயலான்.

உள்ளுறை : பரதவர் தலைவனுக்கும், வலைசுமந்த தோணி பரத்தையரை வசப்படுத்தித்தரும் ஆற்றல்மிக்க பாணனுக்கும், வலைப்படும் மீன்கள் அவன் பேச்சால் மயங்கித் தலைவன் வலையிற் சிக்கித் துயருற்று நலியும் பரத்தையருக்கும் கொள்க. 'எம்மையும் அவ்வாறு அகப்படுத்தக் கருதினையோ?' என்று கூறி மறுத்ததாம்.

இறைச்சி :' புன்னையின் பூந்தாதுகளைக் காற்றெடுத்துத் தூற்றி வெண்குருகின் புறத்தை வேற்று நிறமாக மாற்றி மயக்கியதுபோலப், பொருளினை வாரியிறைத்துத் தலைவன் தலையளி செய்ததன் காரணத்தாலே, புல்லியளான பரத்தையும் அவனது மனைவியேபோலத் தோற்றிப் பிறரை மயங்கச் செய்கின்றாள் என்பதாம். 'பிரிவால் பசலை மூடி மறைக்கப்பட்ட உடலினமாகிய எம்மை, அவன் ஏதிலாட்டியெனப் பிறழ நினைந்தான் போலும்' என்றதும் ஆம்.

ஒப்பு : 'யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள் : இனி, எம்போல் ஒருத்தி நலன் நயந்து என்றும், வருஉம் என்ப வயங்கு புகழ்ப் பேகன், ஒல்லென ஒலிக்குந் தேரொடு, முல்லை வேலி நல்லூரானே' எனக் கண்ணகி கூறியதாக வரும் பரணர் பாட்டையும் இதனோடு ஒப்பிட்டு இன்புறுக (புறம். 144.).

75. உள்ளம் உடையும்!

பாடியவர் : மாமூலனார்.
திணை : குறிஞ்சி.
துறை : சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், தோழி கேட்பச் சொல்லியது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/148&oldid=1678219" இலிருந்து மீள்விக்கப்பட்டது