உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

153


நோக்கினையும் நோக்கி அறிந்தேன் மலையமான் தன் குதிரைமீது அமர்ந்தானாகச் சென்று, புலையனது பெருந்துடிப்பறையானது முழக்கமிட, வேற்று நாட்டிடைப் புகுந்து அந்நாட்டவரது கடத்தற்கரிதான காட்டரணை அழித்து வெற்றிகொண்டு, அந்நிலையே அயாவுயிர்த்தாற் போல எழுந்த அவளது மடநோக்கமும் என்னைத் தோழிபாற் செலுத்தா நின்றது! அதனாற் குறையேதும் நினக்கில்லை காண்.

கருத்து : 'தலைவியது நோக்கிற் பட்டு தளர்வுற்றயாம். அவளது தோழியைப் பணிந்து இரந்து நிற்றல் இழிவானதன்று' என்பதாம்.

சொற்பொருள் : மலையன் – தேர்வண் மலையனாகிய மலையமான் திருமுடிக்காரி; இவனது மா 'காரிக் குதிரை' என்பது, 'காரிக்குதிரை காரியொடு' என வரும் சிறுபாணாற்றுப்படை அடிகளால் விளங்கும்; இவனைப் பாடியோருள் கபிலரும் ஒருவர். குறும்பு – காட்டரண். எருக்கி –அழுத்தி வென்று. வேர்ச்சினை – வேராகிய உறுப்பு. வாளரம் – வாளாகிய அரம். கோல் நேர் எல்வளையிடத்துக் கொள்ளுதற்கு நேரிதாகச் செய்யப்பட்ட ஒளி கொண்ட வளை.

விளக்கம் : தலைவியின் மகிழ்மட நோக்கம். 'மலையன் பகையரணை வென்று, வெற்றிக் களிப்பால் அயாவுயிர்த்தாற் போன்று. தன்னை வெற்றி கொண்டு அடிப்படுத்திய மகிழ்வினாலே செருக்கிய தன்மைத்தாயிராநின்றது' என்பதாம். வேர்ப்பலாவின் கனியைப் பறித்துத் தின்று கழித்துப் போட்ட களைகள் முற்றத்திடத்தே கிடக்கும் என்றதும், அவ்விடத்தே இரவில் அருவியொலியின் இன்னிசையைக் கேட்டபடியே மனையோள் தூங்கும் என்றதும், தலைவியது வளமனையைப் புகழ்ந்து கூறியதாம். 'மகிழ்மட நோக்கு' என்றது, அவளும் தன்னை விரும்புதலின், தோழியைக் குறையிரந்து நிற்றல் தவறாதே பயன் தரும் என்பதனாலாம்.

'சுளையுடை முன்றில்' என்பதற்குப், பறிப்பாரற்றுத்தானே முதிர்ந்து வெடித்துச் சிதறிக் கிடக்கும் பலாச்சுளைகளைக் கொண்ட முற்றம்' என்று உரைத்தலும் பொருத்தமாக அமையும்.


ந.—10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/154&oldid=1679062" இலிருந்து மீள்விக்கப்பட்டது