உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

நற்றிணை தெளிவுரை


'உண்துறைத் தடைஇய' என்பதற்கு உண்ணுநீர் முகந்து கொண்டு போதற்கென ஒதுக்கப்பட்ட நீர்த்துறையிடத்தே அதனைக் கிளைகளால் தடவியபடி வளர்ந்து படர்ந்திருக்கும் எனலும் பொருந்தும். 'கடவுள் முதுமரம் ஆதலின் அவர்கள் அடிக்கடி சென்று தம் காதல் கைகூடி வருதலை வேண்டிக் கடவுளைத் தொழுதமையும் அறியப்படும்.

மேற்கோள் : இஃது இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாகக் கூகைக்கு உரைப்பாளாய்த் தோழி கூறியது என்பர். நச்சினார்க்கினியர் (பொருள். தொல். சூ. 114 உரை).

பிறபாடம் : வாயில் ஒண் துறை – முன்னிடத்து ஒள்ளிய நீர்த்துறை.

84. ஏகுவர் என்பர்!

பாடியவர் : ......
திணை : பாலை.
துறை : பிரிவிடை ஆற்றாளாய தலைவி, தோழிக்குச் சொல்லியது.

[(து–வி.) தலைவனைப் பிரிந்திருத்தலால் ஆற்றாமை மிகுந்தாளான தலைவி, தன் ஆற்றாமை மிகுதி புலப்படத் தன்னைத் தேற்றுவாளான தோழிக்கு இவ்வாறு கூறுகின்றாள்.]

கண்ணும் தோளும் தண்ணறுங் கதுப்பும்,
திதலை அல்குலும் பல பாராட்டி,
நெருநலும் இவணர் மன்னே! இன்றே.
பெருநீர் ஒப்பின் பேஎய் வெண்தேர்
மரன்இல் நீள்இடை மான்நசை யுறூஉம், 5
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்புஇடந் தன்ன
உவர்எழு களரி ஓமைஅம் காட்டு
வெயில்வீற் றிருந்த வெம்புஅலை அருஞ்சுரம்
ஏகுவர் என்ப, தாமே — தம்வயின் 10
இரந்தோர் மாற்றம் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லா தோரே

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/167&oldid=1681278" இலிருந்து மீள்விக்கப்பட்டது