உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

169


தோழி! மலைச்சாரலிடத்தே வேட்டமாடும் கானவன், அம்பினை எய்து வீழ்த்திக் கொன்று, முட்பன்றியின் கொழுவிய தசையினைக் கொணர்ந்தனன். அதனைத் தேன்மணங் கமழுகின்ற கூத்தலை உடையாளான அவன் மனைவியானவள், தான் தோட்டத்திலிருந்து கிண்டிக் கொணர்ந்த கிழங்குகளோடும் சேர்த்துக், காந்தள் மலர்கள் நிரம்பியிருக்கும் அழகுடைய சிறுகுடியிடத்தே உள்ளவர் அனைவருக்கும் பகுத்துத் தருவாள். அத் தன்மைகொண்ட உயர்ந்த மலைநாட்டினன் நம் தலைவன். அவன், நின்பால் விருப்பத்தையும் உடையவன். அழகான குவளை மலர் போன்ற குளிர்ச்சியான நின் கண்களிடத்தே தெளிந்த நீர்த்துளிகள் மிகுதியாகத் துளிர்ப்பவும், மூங்கிலையொத்த பருத்த நின் தோள்களிடத்து விளங்கிய வெற்றித்தொடிகள் சுழன்று நெகிழவும், அவற்றை நோக்கிப் பழிபேசும் இயல்பையுடைய இப் பழைய ஊரிடத்தே பெரிதும் அலரெழுதலும் நிகழும். ஆயினும், குறுகிய கோடுகளையுடைய பெரிய புலிக்கு அஞ்சியதாய்க், குறுக நடக்கும் நடையினதான கன்றினையுடைய பிடியானையானது, தான் அசையாதே நின்றபடி அதனைக் காத்துத் தங்கியிருக்கின்ற தன்மையினையுடையதும், மிகுந்த இருள் சூழ்ந்து செல்வார்க்கு அச்சத்தை தந்துகொண்டிருப்பதுமான சிறுநெறியின் வழியாக, அவன் இனியும் வாராதிருப்பானாக!

கருத்து : 'இரவுக்குறி வேட்டு வருதலைத் தலைவன் கைவிட்டு, நின்னை மணந்து கொள்ளுதலிலே கருத்தைச் செலுத்துவானாக' என்பதாம்.

சொற்பொருள் : ஆய்மலர் – அழகிய குவளை மலர். 'தெண்பனி' தெளிந்த கண்ணீர்த்துளி. விறல் – வெற்றி. அம்பல் – அலர். இருள் கடுகிய – இருள் செறிந்து சூழ்ந்துள்ள. முளவு மான் – முட்பன்றி; முள்ளம்பன்றி. கிழங்கு – மனைப் படப்பைக்கண் பயிரிட்டிருந்த கிழங்கு.

விளக்கம் : 'விறல் இழை' என்றது. 'முன்னர்ப் பூரிப்பால் தலைவனைத் தன்பால் ஈர்த்த வெற்றிமிடுக்கோடு விளங்கிய இழை' எனச் சுட்டி, அதுதான் தற்போது நெகிழ்ந்துபோயின வாட்டத்தைக் குறித்துக் கூறியதாம். அம்பல் – சிலரே அறிந்து, அங்கங்கே தம்முட் கூடிக்கூடி நின்று மறைவாகப் பேசும் பழிச்சொற்கள். இதனைச் 'சொல் நிகழாதே முகிழ் முகிழ்த்துச் சொல்லுவது என்று விளக்குவர் இறையனார் களவியலுரைகாரர்—(சூ. 22 ன் உரை.). 'அம்பலூரும்

ந.—11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/170&oldid=1681295" இலிருந்து மீள்விக்கப்பட்டது