உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

நற்றிணை தெளிவுரை


[(து–வி.) இரவுப்போதிலே, கொடிய காட்டு வழியூடு தலைவன் வருந்துகின்றதனை நினைந்த தலைவி, அவன் வரும் வழியது ஏதத்தை நினைந்து கவலையுற்று நலிகின்றாள். அந்த வழியை நினைத்தபடி அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது]

பூம்பொறி உழுவைப் பேழ்வாய் ஏற்றை,
தேம்கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக்
குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறுபறைப் பாணி அயலது 5
பைந்தாட் செந்தினைப் படுகிளி ஒப்பும்
ஆர்கலி வெற்பன் மார்புநயந்து உறையும்
யானே அன்றியும், உளர்கொல் — பானாள்,
பாம்புடை விடர ஓங்குமலை மிளிர,
உருமுச் சிவந்து எறியும் பொழுதொடு, பெருநீர் 10
போக்குஅற விலங்கிய சாரல்,
நோக்குஅநஞ் சிறுநெறி நினையு மோரே?

தேன் மணம் கமழ்த்து கொண்டிருப்பதான புதுமலர்களையுடைய காட்டினிடத்தே, அழகான கோடுகளையும் அகன்ற வாயினையும் கொண்ட புலியேறானது. தன்னை எதிர்ப்பட்ட களிற்றோடும் போரிடுதலைத் தொடங்கும். அவற்றால் தமக்குத் துன்பம் விளையுமென நினைத்து அஞ்சாதாரான குறவரது இளஞ்சிறார்கள், அவ்விடத்தேயுள்ள பெரிதான பாறைக்கல்லின் உச்சிமேலாக ஏறி நின்ற படி, மனச்செருக்கோடு தம் கையகத்துத் தொண்டகப் பறையினை அடித்து முழக்கியபடியே, அந்தப் போரைக் கண்டு இன்புற்றிருப்பர். அப் பறைமுழக்கின் ஒலியானது, அவ் விடத்துக்கு அயலேயுள்ள பசுந்தாட்களையுடைய தினைப் பயிரது சிவந்த கதிர்களிடத்தே வந்து படியுங் கிளிகளை அச்சுறுத்தி ஓட்டுதலைச் செய்யும், நிரம்பிய ஆரவாரத்தைக் கொண்ட அத்தன்மை கொண்ட வெற்புக்கு உரியவன் தலைவன். அவனுடைய மார்பினைத் தழுவிப்பெறுகின்ற அந்த இன்பத்தை விரும்பியவளாக, இவ்விடத்தே வந்து தங்கியிருப்பவள் யான்.

பாம்புகளைக் கொண்ட மலைப்பிளப்புகளையும். உயர்ந்த கொடுமுடிகளையும் கொண்ட மலையிடமெல்லாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/205&oldid=1688272" இலிருந்து மீள்விக்கப்பட்டது