உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

217


செல்லலை மேற்கொண்டு; தத்துதல் - துள்ளித் துள்ளி நடத்தல். பரி – பற்றுதல். நுணுக்கம் - வளைவாந்தன்மை; அது நீர்ப்போக்கிற்கு ஏற்ப மாறிமாறி அமையும் இயல்பு. மதுகை – மனத்தின் எக்களிப்பு.

விளக்கம் : 'உண்ணற்கு எளிதான தீம்பாலையும் மறுத்து அச்சுறுத்துதற்கும் அஞ்சிப் பணியாது மறுத்தோடும் சிறுபருவப் பண்பினள்' என்றது, அவளது விளையாட்டுப் பருவத்தை நினைந்து வருந்துவதாம். அவள், 'கொழுநனின் குடி வறனுற்றதெனத் தன் பரியையும் மறுத்துப் பொழுதிற்கு உண்ணலையும் நீக்கிவிடும் மதுகையளாயினளே' என, அவள் படும் துயரத்தை நினைந்து பெரிதும் ஏக்கமுற்றதுமாம். மகள் நிலை உரைத்தாகக் கொள்ளின், அதனை வியந்து பாராட்டியதாகக் கொள்க. 'அறிவு' நன்மை தீமைகளை ஆய்ந்து நடக்கும் ஆற்றல். ஒழுக்கம் – ஒழுகும் முறைமை.

பெண்கள் தம் கணவரது வருவாய்க்கு ஏற்ப வாழ்ந்து இல்லறம் பேணும் சிறந்த செவ்வியினராகத் திகழ்தலே பண்டைக்கால மரபு. அதனை இச் செய்யுளால் அறியலாம். தாய்வீட்டுப் பெருவாழ்வையும் மறந்து கணவன் வீட்டு நிலையோடு ஒன்றிக் கலந்துவிடும் உயரிய கற்புநெறியே போற்றத்தக்க தமிழ்நெறி ஆகும்.

மேற்கோள் : மனையறங் கண்டு மருண்டு உவந்து செவிலி கூறியதெனக் கொள்வர் நச்சினார்க்கினியர் (தொல். சூ -153 உரை). 'குடி வறனுற்றென நல்குரவு கூறியும் காதலைச் சிறப்பித்தது' என, மீண்டும் காட்டுவர் அவர் (தொல். சூ. 244 உரை.) வாயில்கள் தமக்குள் தலைவியது செவ்வியைக் கூறி மகிழும் கூற்றுக்கு மேற்கோள் காட்டுவர் இளம்பூரண அடிகள் (தொல். சூ. 151. உரை).

பிற பாடம் : 'ஓக்குபு புடைப்ப'

111. கல்லென வருமே!

பாடியவர் : .......
திணை : நெய்தல்.
துறை : விரிச்சி பெற்றுப் புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது.

[(து.வி) பிரிவுத் துயராலே நலிவுற்றிருந்தாளான தலைவியிடம் சென்று தான் கேட்ட நற்சொல்லின் பயனாகத் தலைவனின் தேரும் விரைய வருமெனச் சொல்லி, அவளைத் தெளிரிக்க முயலுகின்றாள் தோழி.]


ந.—14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/218&oldid=1688838" இலிருந்து மீள்விக்கப்பட்டது