உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

223


பக்கத்தே சிறிது வளைத்து. பொருட் பிணி – பொருளாசையாகிய நோய். உதியன் – சேரன்; உதியன் சேரலும் ஆம். ஆம்பல் அம் குழல் – ஆம்பல் தண்டினாலே அமைந்த அழகான குழல்; 'ஆம்பல்' மூங்கிற்கும் பெயர்: அதனால் மூங்கிலினாலாய ஊதுகொம்பு எனக் கொள்ளுதலும் பொருந்தும். இரத்தி – இலந்தை. ஞாட்பு – போர்க்களம்.

விளக்கம் : 'வழியனுப்புங் காலத்துக் கண்கலங்குதல் நன்னிமித்த மாகாமை உணர்ந்தாளாயினும், பிரிவினைப் பொறுத்தற்கும் ஆற்றாளான அவள், தன் கலங்கிய கண்கள் எதிர்தோன்றாவாறு கூந்தலிடைத் தன் முகத்தை மறைத்துக் கொண்டனள் என்கின்றனன். அவளது கற்பும் காமமும் இணைந்து ஒன்றையொன்று மிகுதற்கு முயலும் நிலையினை இது காட்டுவதாகும். 'ஆம்பலங் குழலின் ஏங்கி' என்றது. ஏக்கத்தால் எழும் அழுகைக் குரலினது தன்மையே அத் துணைச் சுவையுடைத்தாயின், அவள் குரலினிமை எத்துணை இனிதாயிருப்பதெனப் பழகிய அதன் செவ்வியை நினைந்து கூறுவதாம். 'நோக்கு எய்த வந்தன' என்றது, 'அவள்தான் வரவியலாளாய்க் கிடந்து துயருறுகின்றனள்' என அவளுக்கு இரங்கியதாம்.

இறைச்சி : 'மானினத்தால் உண்ணப்பட்டு நலிந்த போதும், தன்பால் நிறைந்த கனிகளை வழிமல்க உதிர்த்திருக்கும் இலந்தை மரத்தைப்போலப், பசலையால் உண்ணப்பட்டுத் தளர்வுற்றபோதும், அவளது பெண்மை ஒளியுடைத்தாய் நின்று சிறக்கின்றது' என்பதாம்.

மேற்கோள் : 'பிரிந்த தலைவன் இடைச்சுரத்துத் தலைவியின் உருவு வெளிப்பட்டுழி மீண்டுவருதலை ஆராய்ந்த கூறுபாட்டின்கண், தனக்குள் சொல்லிக் கொள்வதற்கு, மேற்கோளாக இச்செய்யுளை நச்சினார்க்கினியர் காட்டுவர். (தொல். சூ 140. உரை).

பிற பாடங்கள் : விரை வாங்கு உயர்சினை – விரைவாக வளைந்து மேலுயர்ந்து போகும் கிளை. இரத்திப் பசுங்காய் பொற்ப.

114. யாறு அஞ்சுவல்!

பாடியவர் : தொல் கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : ஆறு பார்த்து உற்ற அச்சத்தால், தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சிறைப்புறமாகச் சொல்லியது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/224&oldid=1689925" இலிருந்து மீள்விக்கப்பட்டது