உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

நற்றிணை தெளிவுரை


காரணத்தை உரையாய் ஆயினை. நினக்கு யான்', 'ஒரே உயிரை இரண்டுடலின் கண்ணே பகுத்துவைத்தாற் போன் ஒன்றுகலந்த அன்புமாட்சியினை உடையவளாதலினாலே அந்த மாற்றங்களைக் கண்டேன்' எனக் கூறியவளாக மிகவும் என்னைக் குறித்து வருந்தி அழுகின்ற அதனைக் கைவிடுவாயாக!

தலைசாய்ந்து முற்றிய கதிர்களையுடைய தினைப்புனத்தைக் காத்திருந்த காவற்போதிலே, ஒருவன் ஒருநாள் என்முன் வந்தடைந்தான். தலையிற் கண்ணி சூடியவனாகவும், கால்களிற் கழல்களைக் கொண்டோனாகவும், மார்பில் தாரினை அணிந்தோனாகவும், என் உள்ளம் தண்மை அடையுமாறு என் முதுகை அணைத்தும் நின்றான். அது முதற்கொண்டு அந்த இன்பத்தையே நினைந்த நெஞ்சத்தோடு யான் அடைந்த நோயும் இத்தன்மைத்தாக ஆகிவிட்டது!

கருத்து : இது தோழி கூற்று. இதனைக் கேட்டலுறும் தலைவி தலைவனுக்கு அருள்செய்ய இணங்குவாள் என்பதாம்.

சொற்பொருள் : சுடர் – சுடர் விளக்கு. சாய்தல் – ஒளி குன்றுதல். பாம்பு – இராகு கேதுக்கள். கரப்பவும் – மறைக்கவும். உயிர் பகுத்தன்ன மாண்பு – ஈருடலும் ஓருயிருமாய் ஆயின நட்பின் செவ்வி. அழுதல் ஆன்றிசின் – கழுதலைக் கைவிடுக. தண்ணென்று – குளிருமாறு. சிறுபுறம் – முதுகு.

விளக்கம் : தோழி கூறியதாகக் கொள்ளின், அவள் ஒருவன் வந்து தன்னைத் தழுவியதாகக் கூறியமையும் பிறவும் படைத்துமொழிதலே எனக் கொள்க. புனத்தயல் வருபவன் தன் காதலனே யாதலின், தலைவி, தன்பால் கொண்ட காதற் பெருக்கினாலே அவன் பிற மாதரை அணையான் என்பதனை உணர்ந்து, அவன்பாலே நெகிழ்ந்து செல்லும் உள்ளத்தினளாவாள் என்பதாம்.

அறத்தோடு நிற்றலாகக் கொள்ளின் தலைவி கூற்றாகும். அப்பொழுது தன்னை அதுகாறும் மறைத்தமைக்கு நாணியவளாக, அவள் தோழிக்குத் தன் களவுறவைக் குறிப்பாகப் புலப்படுத்தினளாகவும், தன்னையர்க்கு அறிவித்து அறத்தொடு நிற்றற்கு வேண்டினளாகவும் கொள்க.

மேற்கோள் : 'தோழி வினாவிய வழித் தலைவி கூறியதற்கு மேற்கோளாகத் தொல்காப்பியக் களவியற் சூத்திர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/251&oldid=1692335" இலிருந்து மீள்விக்கப்பட்டது