உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

நற்றிணை தெளிவுரை


நகையாடி மகிழாததன் முன்பாக, நம் சீறூரும் நமக்கு இனிதாயிருந்தது காண்!

கருத்து : 'அவர் அருகே இன்மையினால்' இனிதாயிருந்த அதுவும் இன்னாதாகத் தோன்றுகிறது' என்பதாம்.

சொற்பொருள் : தூங்கல் – தொங்குதல். ஓங்கு – உயர்ந்த; நெடிய. பெண்ணை – பனை, மாஅரை – கரிதான அடிமரம். தாரம் – உணவுப் பொருட்கள். தண்குடி – தண்மைமிக்க குடிவாழ்க்கை: தண்மை – வறியவர்க்கு உதவும் தண்ணளி உடைமை. கொட்கும் – சுழலும். உளை – பிடரி மயிர்.

விளக்கம் : 'நகாததன் முன்பு இனிதாயிருந்த சீறூகும். அவரைப் பிரிந்த காரணத்தால் இன்னாதாயிருக்கின்றது' என்பதாம். ஊரும் இன்னாதாயிரா நின்றது, அவளது உள்ளத்துப் பெருநோயினாலே என்று கொள்க. ஊரவர் அலர்கூறிப் பழித்தலால் ஊர் இன்னாதாயிற்று என்றனளும் ஆம்.

136. அறவோன் என்னை!

பாடியவர் : நற்றங் கொற்றனார்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகத் தலைவி தோழிக்கு உரைத்தது.

[(து–வி.) களவுக்காலத்து இடையிடையே சேர்கின்ற பிரிவுக்கு ஆற்றாது நலிந்தாள் தலைவி. அவள் தலைவனிடம் அவளை விரைய மணந்து வாழும் வாழ்வினைப் பற்றிய எண்ணத்தை ஏற்படுத்தக் கருதுகின்றாள். குறியிடத்து, அவன் வந்து சிறைப்புறமாக நிற்பதறிந்தவள், தன் தோழியிடத்துக் கூறுவாள்போல, அவனும் கேட்டு உணருமாறு இப்படிக் கூறுகின்றாள்.]

திருந்துகோல் எல்வளை வேண்டியான் அழவும்
அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்தாய்ந்து கொடுத்த அறவோன் போல
என்னை வாழிய, பலவே; பன்னிய
மலைகெழு நாடனொடு நம்மிடைச் சிறிய 5
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின்வரை அமைந்து
தோள்பழி மறைக்கும் உதவிப்
போக்கில் பொலந்தொடி செறீஇ யோனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/263&oldid=1692764" இலிருந்து மீள்விக்கப்பட்டது