உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

நற்றிணை தெளிவுரை


[(து–வி.) பகற்குறிக்கண் தலைவனும் தலைவியும் கூடி வருகின்ற காலம்; மாலையிலே பாக்கஞ்சேரும் தலைவி தலைவனைப் பிரிந்திருக்க ஆற்றாளாய்த் துயருறுகின்றனள் என்று கூறி, அதனால் தம் பாக்கத்து வந்து இரவுப்போதிற்குத் தங்கிப் போகுமாறு தோழி கூறுகின்றாள். தலைவன் இதனை ஏற்கானாய், வரைந்து கோடலிலேயே மனஞ்செலுத்துபவனாவன் என்பதாம்.]

மணிதுணிந் தன்ன மாஇரும் பரப்பின்
உரவுத்திரை கெழீஇய பூமலி பெருந்துறை
நிலவுக்குவித் தன்ன மோட்டுமணல் இடிகரைக்
கோடுதுணர்ந் தன்ன குருகுஒழுக்கு எண்ணி
எல்லை கழிப்பினும் ஆயின் மெல்ல 5
வளிசீத்து வரித்த புன்னை முன்றில்
கொழுமீன் ஆர்கைச் செழுநகர்ச் செலீஇய
'எழு'எனின் அவளும் ஓல்லாள்: யாமும்
'ஒழி'என அல்லம் ஆயினம்; யாமத்து
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலிகடற் 10
சில்குடிப் பாக்கம் கல்லென
அல்குவதாக, நீ அமர்ந்த தேரே!

கரிய பெருங் கடலானது, நீலமணியைக் குற்றம் அற்றதாய்த் தெளிந்து கொண்டாற்போன்ற நீர்ப்பரப்பைக் கொண்டிருப்பதாகும். அதன் வலிய அலைகள் கொணர்ந்து குவித்த மணலிடத்தே பூக்கள் நிறைந்து கிடக்கும் அழகினைக் கொண்டது பெரிதான கடற்றுறை. அத் துறைக்கண் நிலவைக் குவித்து வைத்தாற்போன்ற முகடுயர்ந்த மணல்மேட்டினது இரந்துசரியும் கரையிடத்தே யாமும் நிற்பேம். சங்குகளை இணையாகத் தொடுத்துப் போட்டாற்போல வரிசை வரிசையாக அமர்ந்திருக்கும் கடற் குருகுகளை எண்ணிக் கண்டபடி நின்னோடும் பகலினைப் போக்கினோம். ஆயின், 'காற்றடித்துக் கோலஞ் செய்த புன்னைமரம் நிற்கும் முற்றத்தையுடைய கொழுவிய மீனுணவை உண்ணும் செழுமையான மனையகத்துச் செல்வதன் பொருட்டாக எழுவாயாக' என்று மெல்லச் சொன்னேமாயின், அவளும் அதற்கு இசைவாள் அல்லள். யாமும், 'வாராதே இவ்விடத்தேயே ஒழிவாயாக' என்றுரைக்கும் நிலையினம் அல்லேம். அதனால், சேர்ப்பனே! நின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/307&oldid=1694872" இலிருந்து மீள்விக்கப்பட்டது