உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

329


நீருண்ணும் வேட்கைக்குச் செலுத்தப்பெற்ற வருத்தத்தையுடைய யானை ஒன்று, வெப்பமிக்க குன்றுகளைச் சூழவும் கொண்ட வெம்மையுடைய மலைப்பக்கத்திலுள்ள நிலப்பகுதியின் கண்ணே சென்றது; அதனுடன் செல்லமாட்டாத மெல்லிய தலைமையுடைய கன்றானது, சேரியிடத்தேயுள்ள அழகிய பெண்டிர்களது நெஞ்சத்தே அச்சமுண்டாகும்படியாக, ஊரிலுள்ள பசுக்கன்றுகளோடு சேர்ந்து கொண்டு ஊருக்குள்ளேயும் புகுந்துவிட்டது. அத்தகைய நாட்டிற்கு உரியவன் நம் தலைவன். அவன்தான் நம்மை இவ்விடத்தே தனித்திருக்க விட்டானாய்ப் பலவாகிய மலைகளையுடைய கடத்தற்கரிய சுரநெறியிலே செல்வானாயின், பேய்கள் நிலை கொண்டவாய் உலவிக் கொண்டிருக்கும் பொழுதினைக் கொண்ட இரவின் நடுயாமப் பொழுதிலே. ஆசைகொண்ட நெஞ்சத்தோடு கலந்து, அவனுடைய மார்பின் மேலாகப் பொருந்திப் படுத்துறங்கலைப் பழகியுள்ள நம் கண்கள் தாம், செய்வினைத் தொழிவாற் சிறப்புற்ற தெளிவான ஓசைகொண்ட மணிகள் கட்டப் பெற்றுள்ள வேற்படையினின்றும், மணிகள் வீழ்ந்தனவாயின் அதன் பின்னர் அவ்வேற்படையானது தோன்றுமாறுபோல, இனி எவ்வாறு துயில் கொள்ளற்கு வல்லன வாகுமோ?

கருத்து : அவன் பிரிந்தானாயின், இனி உறக்கமும் நம்மைவிட்டு அகலும்' என்பதாம்.

சொற்பொருள் : நீர் நகை – நீர் வேட்கை. ஊக்கிய – செலுத்திய. உயவல் – வருத்தம். எறிய – அச்சம் தாக்கும்படியாக. ஞாங்கர் – வேற்படை. கழுது – பேய். அளைஇ - அளவளாவிக் கலந்து. மரீஇய – பொருந்திய.

விளக்கம் : வேற்படைக்கு ஒலிகொண்ட மணிகளைக் கோத்து மாலையாகக் கட்டி, அதன் முனைக்குக் கீழ்ப் பகுதியிலே பூணாகப் பூட்டியிருப்பர். இது வேலுக்கு அழகு தருவதாயிருக்கும். இதனையிழந்த வேல் போன்ற கண்கள் என்றலால், வேலின் இலைப்பகுதி போன்ற கண்கள் என்று கொள்க. அவனைப் பிரிதலால் பொலிவழியும் நிலைக்கு வினைப் பூண் தண்மணி வீழ்ந்தனபோன்ற நிலையைக் கொள்க. மணி வீழ்தல், பகைவருடலில் வேல் தைத்து செல்லுங் காலத்து ஆதலின், வேன்முனையும் செந்நிறக் குருதிக்கறை படிந்ததாய் விளங்கும்; அவ்வாறே உறக்கமிழந்தும் துயருற்றுக் கலங்கியும் செந்நிறம் பெற்ற

ந.—21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/330&oldid=1696917" இலிருந்து மீள்விக்கப்பட்டது