338
நற்றிணை தெளிவுரை
யெனவும் நம்பினாள். அதனாலே கொதிக்கும் பாலைப் போன்று பசலை பரந்துள்ள என் உடலினைச், சுடுகின்ற வானத்தைப் போல மேலும் எரித்து விடுவாளாகவும் நோக்கினாள். இனி, இல்லத்தே சிறையிட்டும் வைத்து விடுவாள் போலும்?
கருத்து : அன்னை களவுறவை அறிந்தனள்: இனி, இவளை மணந்தாலான்றிப் பெறுதல் வாயாது' என்பதாம்.
சொற்பொருள் : அலைத்த – வருத்திய: கடலிலுள்ள மீன்களைப் பற்றிக் கொளலால் வருத்திய. திமில் – மீன்பிடி படகு. கொடுமை – வளைவான தன்மை. மீன்நெய் – மீன் கொழுப்பிலிருந்து இறக்கப் படுவது. சிறுசொல் – சிறுமையுடைய சொல். சுடுவான் – எரிக்கும் கதிரவன். அடுபால் – அடப்பட்டுக் கொதிக்கும் பால்; அதன்பால் தோன்றும் ஆடைபோலத் தலைவியின் மேனியிடத்தும் புள்ளி புள்ளியாகப் பசலை பற்றிப்படர்ந்தது என்க.
விளக்கம் : தலைவனை இடையிடையே பிரிந்திருக்கவும் ஆற்றாளாய்த் துயருறும் தலைவியது பேரன்பினைக் கூறுவாள், அவள் மெய்யிடத்தே 'அடுபால் அள்ள பசலை' தோன்றிற்று என்றாள்; அதனைப் பிறர் அறியாவாறு மறைக்க வியலாமையினைக் கூறுவாள், சேரியம் பெண்டிர் சிறுசொல் பேசியவராக அலர் தூற்றினமை கூறினாள். அன்னை அறிந்தமை சுடுவான்போல் நோக்கினாள் என்றதனாலே உணர்த்தப் பெற்றது.
'மீன் நெய் அட்டி' என்பது சிந்தனைக்கு உரியது. பரதவர் விளக்கு எரிப்பதற்கு மீன்நெய்யைப் பயன்படுத்திய இச் செய்தியால், இத் தொழிலை அவர் அறிந்திருந்தமையும், இந்நெய் பலவற்றுக்கும் பயன்பட்டமையும் அறியப்படுவதாம்.
உள்ளுறை : 'கடல் வேட்டைமேற் சென்ற பரதவர்தாம் ஈட்டிய மீன்களைப் பலரும் காணக் கடற்கரை மணலிடத்தே குவித்துப்போட்டுச் சிறுதீ விளக்கில் துஞ்சுவர் என்றது, அவ்வாறே தலைவனும் பெரும்பொருளை ஈட்டிக் கொணர்ந்து தலைவியின் இல்லத்து முற்றத்திடத்தே குவித்துத் தலைவியை வரைந்து மணந்து இல்லறத்திலே இணை பிரியானாய் வாழ்தல் வேண்டும் என்பதாம்.