உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

நற்றிணை தெளிவுரை


துயரத்தைத் தாங்கிக் கொள்வாயாக' என்று சொல்லுகின்றீர்கள். அதுதான் என்னால் இயலக்கூடிய தாகுமோ? மையுண்ணும் கண்களிடத்துள்ள மணியிடத்து வாழ்கின்ற பாவையானது வெளிப்போந்து நடைகற்றாற்போல, என் அழகிய சாயலையுடைய இளமகள் விளையாடியிருந்த நீலமணிபோன்ற அழகிய நொச்சியையும் திண்ணையையும் கண்டதும், அவளையே யானும் நினைப்பனே! நினைத்தால், என் உள்ளமும் வேகின்றதே! இதற்கு யான் என் செய்வேனோ?

கருத்து : 'அவளைப் பிரிந்து எப்படி ஆற்றியிருப்பேன்' என்பதாம்.

சொற்பொருள் : ஒரு மகள் – ஒரே குழந்தையாகத் தோன்றிய செல்வ மகள். மொய்ம்பு – வலிமை, அணி இயல். அழகிய சாயல். நொச்சி – நொச்சி வேலியின் அணித்தான இடம். தெற்றி – திண்ணை; தெற்றியாடும் இடமும் ஆம். தெற்றியாடல் – கழற்சியாடல்.

விளக்கம் : மகளது அருமையை நினைத்துத் தாய் புலம்புகின்றாள். ஒரே மகள் என்பது ஏக்க மிகுதிக்கு மேலும் காரணமாகின்றது. இல்லெனில், பிற புதல்வியரால் அத் துயரம் குறைதற்கு வாய்ப்பு உண்டாகும் எனலாம் 'மணிவாழ் பாவை நடைகற்றன்ன' என்றது, தன் மகளது எழிலையும், தான் அவளைப் பேணிய பெருஞ் செவ்வியையும் எண்ணிக் கலங்கிக் கூறியதாம்.

மேற்கோள் : அகத்திணை இயலுள், நற்றாயின் கூற்று நிகழும் இடங்களை வரையறுக்கும் சூத்திர உரையுள், 'அவ் வழியாகிய கிளவி' என்பதற்கு இச்செய்யுளை நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டி, இந்நற்றிணை 'தெருட்டும் அயலிலாட்டியர்க்கு உரைத்தது என்பர்' (தொல்.அகத். 36 உரை).

உவமவியலுள் 'வினையுவமத்தின் வகை என்னும் பகுதியுள் மணிவாழ் பாவை நடைகற்றன்ன என்னும் பகுதியைச் காட்டி. 'நடைகற்றன்ன' என்புழிக் கற்று என்னும் வினையெச்சம் தன் எச்சவினை இகந்தாயிலும். அஃது உவமப்பகுதியாகலான் அங்ஙனம் வருதலும் 'வகை' என்றதனானே கொள்ளப்படும் (உவம.2) என்பர் பேராசிரியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/357&oldid=1706390" இலிருந்து மீள்விக்கப்பட்டது