உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358

நற்றிணை தெளிவுரை


வாக்குகளிலே உரைக்கப்பட்ட புகழுடையதாய், உயரமும் பெற்றிருப்பதாய் விளங்குவது. அக் கொல்லிமலையின் மேற்றிசைப் பக்கத்தே அகன்ற இலைகளையுடைய காந்தளது அசைந்தாடும் பூக்குலைகளிலே பாய்ந்துவந்த வண்டினங்கள் இழைந்திருக்கும் பலவாய கண்களைக் கொண்ட தேனடைகள் பலவாக நிறைந்து விளங்கும். தேனையுடயை நெடிதான அம் மலைப் புறத்தே தெய்வத்தாற் செய்துவைக்கப் பெற்றதான செய்வினைத் திறனால் மாண்புடைத்தாக விளங்கும் கொல்லிப்பாவையும் அமைந்திருக்கும். அப்பாவையைப் போன்றாள் என் தலைவியாவாள். என்னைக் கொல்விக்கும் சூழ்ச்சியினை அவளும் அன்று செய்தனள்! அதனாலே, அடங்காப் பெருநோயோடு பலபலவாக எண்ணியெண்ணிக் கழிகின்ற துன்பமிகுதியை யானும் உடையவனாயினேன்; என் நிலை கலங்கியவனுமாயினேன். காமமானது எல்லைகடந்ததாய்ப் பெருகிக்கொண்டு போதலினாலே, என் செயலாவன அனைத்தையும் கைவிட்டேனாய் நலிகின்றேனும் ஆயினேன். என் அந் நிலையைக் கண்டதன் அளவிலேயும், நீதான் அவளை எனக்குத் தருதற்கான முயற்சிகளைச் செய்யாது ஒழிவாயானால், யான்தான் யாது செய்வேன்? ஊழால் வந்துற்ற அழிபாடெனக் கொண்டேனாய், அதனையே நோவா நிற்பேன். வேறு யாது தான் செய்வேன்?

கருத்து : 'தலைவியை அடையப் பெறினன்றித் தனக்கொரு உயிர் வாழ்வென்பதுதானும் இல்லை' என்பதாம்.

சொற்பொருள் : ஆனா நோய். அமையாதாய்ப் பெருகி நிற்கும் நோய்; அது காமம். அழிபடர் – அழிவைத் தருகின்ற படர்; நொடிக்குநொடி படரும் துயரினை விளைத்தலாற் காமமும் 'படர்' எனப்பட்டது. கைம்மிகல் – தடைசெய்யும் ஆற்றலை மீறிப் பெருகுதல்; கைகடந்து போதல். கையறுதல் – செயலறுதல். நல்குதல் – அருளுதல்; அது தலைவியைத் தலைவனோடு கூட்டுவித்தல். மெலியாது – உள்ளம் தளராது; பொறையன்பாற் பெறப்போகும் பெரும்பரிசிலின் நினைவு நடையின் தளர்வைப் பொருளாகக் கொள்ளாமற்படிக்குச் செய்யும் என்க. உரைசால் – புகழுரையாலே மேம்பட்ட. கொல்லி – கொல்லி மலை; சேரர்க்கு உரியது. பொறையன் – சேரன்: இரும்பொறை மரபினனாகிய சேரமானும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/359&oldid=1706394" இலிருந்து மீள்விக்கப்பட்டது