உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360

நற்றிணை தெளிவுரை


காலத்தினது எல்லைவரைக்கும் தான் பிரிவைப் பொறுத்து ஆற்றியிருப்பல் என்பதுபடத் தலைவி இவ்வாறு தேறுதல் கூறுகின்றனள்.]

கல்லூற்று ஈண்டல கயன்அற வாங்கி
இரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர்கொண்டு
பெருங்கை யானை பிடியெதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம்கூர் கடத்திடை
வேனில்ஓதி நிறம்பெயர் முதுபோத்துப் 5
பாண்யாழ் கடைய வாங்கிப் பாங்கர்
நெடுநிலை யாஅம் ஏறும் தொழில்
பிறர்க்கென முயலும் பேரருள் செஞ்சமொடு
காமர் பொருட்பிணிப் போகிய
நாம்வெங் காதலர் சென்ற ஆறே! 10

தோழி! கற்பாறையிடத்தே அமைந்துள்ள ஊற்றிலே சேர்ந்திருந்த நீரினைப், பெரிய சருச்சரையையுடைய நெடிதான தன் துதிக்கையினை நீட்டிக், களிறானது அவ்விடத்து நீர் முற்றவும் இல்லாது ஒழியுமாறு மொண்டு கொண்டது. பெருத்த துதிக்கையினையுடைய அக் களிறானது, அங்ஙனம் மொண்டுகொண்ட பின்னர்த் தான் அதனைப் பருகாதாய்த்தன் பிடிக்குத் தருதற்குக் கருதியபடி, அதன் எதிராக ஓடிக்கொண்டிருப்பதுமாயிற்று வெம்மைகொண்ட காட்டிடத்துள்ள வறன்மிகுந்த கற்சுரத்தினது தன்மை அத்தகையதாகும். அத்தகைய காட்டு வழியினிலே,

தன்னுடைய குடும்பத்தினது நல்லாழ்வுக்கு வேண்டுமளவுக்குத் தன்னிடத்தே பொருள் வளமை இருந்தபோதினும், தன்னை நாடிவரும் இரவலரான பிறருக்கு உதவுதற்குப் பொருள் வேண்டுமே எனக் கருதிச்சென்று. அப்பொருளைத் தேடிவருவதற்கான முயற்சியைச் செய்யத் துணிந்த பேரருள் கொண்ட நெஞ்சினனாகத் தலைவனும் ஆயினன். அத்தகைய நெஞ்சத்தோடே விருப்பந்தருகின்ற பொருளாசையும் அவனுள்ளத்தைப் பிணித்தலினாலே, நாம் விரும்புங் காதன்மையினை உடையவனாகிய தலைவனும் நம்மைப் பிரிந்தானாகிப் பொருள்மேற் சென்றனன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/361&oldid=1706887" இலிருந்து மீள்விக்கப்பட்டது