உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

377


தழுவுகின்ற வாடையே!' என்கின்றாள்; அக்குளிரால் தன்னுடல் நடுங்கும் என்பது இதன் பொருள். 'பேரஞர் உறுவிக்கு உதவுதலே அருளின்பாற் பட்டதாகும்; உதவாதொழியினும் வருத்துதல் எத்தகைய பெருந்தவறு ஆகும்?' என்றும் வினவுகின்றாள். பகையெனின் தளர்ந்த செவ்வி நோக்கிச் சென்று வெற்றிகொள்ளல் பொருந்தும்; நினக்குத் தீதறிந்திலமாகிய எம்பாற் பகையும் நினக்கில்லை; பின்னரும் எதனாலோ எம்மை வருத்துகின்றனை என்பதுமாம். 'பொருட்பிணிப் பிரிந்தனர்' என்றது, தன்னினுங்காட்டில் பொருளையே பெரிதாக உளங்கொண்டமைக்கு வருந்திக் கூறியதுமாகும். அஞர் – துன்பம். உறுவி என்பது தன்னையே படர்க்கையிடமாகக் கூறிக்கொண்டது; இடவழுவமைதி. 'தீதறிந்தன்றோ இலம்' என்றலால், 'யாம் நட்பாவோம்; ஆதலின் எம்மை வருத்தலைக் கைவிட்டு எமக்கு இது செய்த அவரைச் சென்று வருத்துக' என்பதாம். வருத்தின், அவரும் எம்பால் விரைய மீள்வர்; எம் துயரமும் தீரும்; நின்னையும் யாம் குறைகூறோம் என்கின்றனள்.

ஈங்கை கூதிர்காலமாகிய ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலே மலரும் தன்மையது; அதன் மலர் துய்யுடையது. இச் செய்திகளைப் பிற சங்கச் சான்றோரும் தம் செய்யுட்களுள் உரைத்துள்ளனர் — (குறு: 380, 110 ஆம் செய்யுட்கள்.)

194. யாது செய்வோம்?

பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார்.
திணை : குறிஞ்சி
துறை : சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇயது.

[(து–வி.) இரவுக் குறியிடத்தே செவ்விநோக்கியவனாகத் தலைவன் ஒருசார் ஒதுங்கி நிற்கின்றான். அவன் வரவைத் தோழி அறிகின்றாள்; களவு நாட்டத்திலிருந்து தலைவியை மணந்து வாழ்தற்கான இல்லறவாழ்வினை மேற்கொள்ளும் எண்ணத்தை நோக்கித் தலைவனின் உள்ளத்தைத் திருப்புதற்கு நினைக்கின்றாள். தலைவியிடம் கூறுவாள் போல் இப்படித் தலைவனும் கேட்டுணருமாறு கூறுகின்றாள்.]

அம்ம வாழி தோழி கைம்மாறு
யாதுசெய் வாங்கொல் நாமே கயவாய்க்
கன்றுடை மருங்கின் பிடிபுணர்ந்து இயலும்
வலனுயர் மருப்பின் நிலம்ஈர் தடக்கை
அண்ணல் யானைக்கு அன்றியும் கல்மிசைத் 5

ந.—24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/378&oldid=1706937" இலிருந்து மீள்விக்கப்பட்டது