உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

389


இறத்தலுக்குப் பைதல் வெண்குருகின் நரலுதல் காரணமாகும் என்றது, இரவுப்போதினும் கண்ணுறக்கமில்லாதே வருந்தியிருந்த நிலையைக் காட்டுதற்காம்.

உள்ளுறை : காற்றாலே அலைக்கப்பட்டும் ஒளியவியாது சுடர்விடும் விளக்கையுடைய துறை என்றது, அவ்வாறே பிரிவுத்துயரால் அலைக்கப்பட்டு வருந்தியிருந்தும், அவர் வருவர் என்னும் நம்பிக்கையினாலே தான் உயிரோடு வாழ்ந்திருத்தலை உரைத்ததாம்.

200. இதுவும் உரைக்க!

பாடியவர் : கூடலூர்ப் பல்கண்ணனார்.
திணை : மருதம்.
துறை : தோழி தலைமகளது குறிப்பறிந்து வாயிலாகப் புக்க பாணன் கேட்பக் குயவனைக் கூவி இங்ஙனம் சொல்லாயோ என்று குயவற்குச் சொல்லியது.

[(து–வி.) பரத்தையை விரும்பித் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவனுக்குச், சில காலத்திற்குப் பின்னர் அந்தப் பரத்தையின் உறவும் வெறுத்துவிட, அதன் தலைவியின் உறவை நாடுகின்றான். தன் செயலால் தலைவி சினமுற்றிருப்பாளென்பதை அறிந்தவன், அவளைத் தனக்கு இசைவிக்குமாறு தன் பாணனைத் தூதாக அனுப்புகின்றான். அவனைக் கண்டதும் தலைவியின் உள்ளம் நெகிழ்கின்றதைக் கண்ட தோழி, அவ் வேளையிலே விழாவினை அறிவிப்பானாக வந்த குயவனிடங் கூறுவாள் போலப். பாணனுக்கு மறுப்புக் கூறுகின்றாள். இங்ஙனம் தோழியின் கூற்றாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

கண்ணி கட்டிய கதிர அன்ன
ஓண்குரல் நொச்சித் தெரியல் சூடி
யாறுகிடந்த தன்ன அகல்நெடுந் தெருவில்
'சாறு'என நுவலும் முதுவாய்க் குயவ!
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ: 5
ஆம்பல் அமன்ற தீம்பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவாய் ஆகி
'கைகவர் நரம்பின் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ வையெயிற்று
ஐதகல் அலகுல் மகளிர்! இவன் 10
பொய்பொதி கொடுஞ்சொல் ஓம்புமின்' எனவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/390&oldid=1706967" இலிருந்து மீள்விக்கப்பட்டது