உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

391


என்பது இக் காலத்தும் காளிகோயில் விழாவாக விளங்குதலும் இதனை விளக்கும். 'பொய்கை ஊர்க்கு' என்றது, பரத்தையின் ஊரைக் குறிப்பிட்டுக் கூறியது என்க. 'பாணன் செய்த அல்லல்'— பரத்தையர் பலரையும் மயக்கித் தலைவனுக்கு இசைவித்துப் பின்னர் அவனாற் கைவிடப்பெற்று அவர்கள் பலரும் துயருற்று நலிந்து கெடுமாறு செய்தது. 'கைகவர் நரம்பின் பனுவற் பாணன்' என்றது, இசையின் இனிமையாலும் பாட்டின் நயத்தாலும் மகளிரை மயக்கிவிடுபவன் என்றற்காம். இதனால், தலைவி தலைவனை ஏற்பதற்கு இசையாள் என மறுத்து உரைத்தனள் ஆகும். ஆனால், தலைவி கற்பு மேம்பாட்டிற் சிறந்தவளாதலினால், அவள் தலைவனை ஏற்றற்கே விழைவதனைப் பாணன் அவளது முகக்குறிப்பால் அறிந்து, தலைவனைத் தலைவியுடன் சேர்ப்பிப்பான் என்பதும் இதன் பயனாகும்.

'பொய்பொதி கொடுஞ்சொல்' என்றது, 'தலைவன் மிக நல்லன்: உம்மையனறிப் பிறரை நாடுதல் நினையான்; உம்மையே நினைத்து உருகுவான்; ஆதலின் அவனை ஏற்பீராயின் உமக்குப் பெரிதும் நன்மையாம்' என்றாற்போலச் சொல்லிப் பெண்களை மயக்கித் தலைவனுக்கு இணங்கச் செய்தல்.

நற்றிணை முதல் இருநூறு
செய்யுட்களும் புலியூர்க்கேசிகன்
தெளிவுரையும் முற்றுப்பெற்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/392&oldid=1708208" இலிருந்து மீள்விக்கப்பட்டது