உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

404

நற்றிணை தெளிவுரை


தோழராகவும் அவைப் புலவராகவும் வாழ்ந்த சிறப்பினர். சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனையும், மலையமான் திருமுடிக் காரியையும். மற்றும் பலரையும் பாடியவர். சங்கத் தொகை நூற்களுள் 235 செய்யுட்கள் இவர் பெயரால் விளங்குவனவாகும். குறிஞ்சிக்கலியும், குறிஞ்சிப் பாட்டும், ஐங்குறு நூற்றுள் குறிஞ்சிபற்றிய நூறு செய்யுட்களும், பதிற்றுப்பத்துள் 'ஏழாம் பத்தும் இவராற் செய்யப்பெற்ற பெருநூற்கள் எனலாம். இவரது செய்யுட்களுள் குறிஞ்சித் திணையின் குன்றாத பேரெழிலைக் கண்டு இன்புறலாம். 'நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்' எனத் தலைவனைக் குறிப்பிடும் தலைவியையும் (1), 'பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே' எனவரும் பெரியோரியல்பையும் (32), 'நல்லுரை கூறியோள் அமுதம் உண்க' என வாழ்த்தும் மரபினையும் (65), மலையனின் போர்மறச் செவ்வியையும் இச் செய்யுட்களிடையே கண்டு நாம் இன்புறலாம்.

கயமனார் 12, 198

இவர் பாடியவாகக் காணப்படும் 25 செய்யுட்களுள் நற்றிணையுள் ஆறு செய்யுட்கள் அமைந்துள்ளன. அவற்றுள் இவை இரண்டாகும். 'பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல், இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொறும் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்' எனக் குறுந்தொகையுட் கூறிய (9) உவமைத் திறத்தால் இப் பெயரினை இவர் பெற்றனர். இவரது செய்யுட்கள் பலவும் மகட்போக்கிய தாயது புலம்பலாகவே காணப்படுதலைக் கொண்டு இவரைப் பெண்பாலரென ஐயுறுதலும் பொருந்துவதாகும். அன்னி திதியனது காவன் மரமான புன்னையை வெட்டியழிக்த செய்தியை இவரது அகப்பாட்டுள் (145) காணலாம். இச் செய்யுட்கள் பாலைத்திணைச் செய்யுட்களை நயமுறப் பாடுதலில் இவர் வல்லவரென்னும் உண்மையினை நன்றாக உணர்த்துவனவாகும். உடன்போக்கின் கண்ணே செல்லற்கு முற்பட்ட தலைவிக்கு அதனை மறுத்து உரைத்துத் தோழி அஞ்சுவித்ததாகப் புதியவொரு துறையினை வகுத்துரைத்தவரும் இவராவர் (நற்.12)

கள்ளம்பாளனார் 148

இவர் கருவூர்க் கண்ணம்பாளனார் எனவும் கூறப்பெறுவர்; அகநானூற்றுள் இரண்டு செய்யுட்களோடு இச்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/405&oldid=1711062" இலிருந்து மீள்விக்கப்பட்டது