உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408

நற்றிணை தெளிவுரை


பரத்தையிற் பிரிந்தோனாய தலைவன், தனக்குப் புதல்வன் பிறந்ததறிந்து தன் மனைக்குச் செல்லும்போது, தலைவியை எதிரிட்டு நோக்கற்கு அஞ்சிய தன்மையினை இவர் நயமாக விளக்குகின்றனர். அரியதொரு காட்சியாகக் கண்முன்னே நிழலாடும் வண்ணம் சொல்லோவியப்படுத்துக் கூறும் இவர் புலமையினை நாமும் அறிந்து உணர்ந்து அநுபவிக்கலாம்.

சல்லியங் குமரனார் 141

இவரை உறையூர்ச் சல்லியங் குமரனார் எனவும் உரைப்பர்; அவர் வேறு இவர் வேறு எனக் கொள்ளலும் பொருந்தும். வேறு பிரித்துக் காட்டற் பொருட்டே இவரைச் சல்வியங் குமரனார் எனவும், அவரை உறையூர்ச் சல்லியங் குமரனார் எனவும் குறித்துள்ளனர் போலும். சல்லியன் என்பாரின் மகனார் 'சல்லியன் குமரனார்' எனப் பெற்றமையாற் சல்லியனாரும் பெரும்புகழினராக விளங்கினராதல் வேண்டும். பாரதக் கதையுள் வரும் 'சல்லியன்' என்னும் பெயரைக் கருதவே இப்பெயரும் பண்டை நாளில் வழக்காற்றிலிருந்து வந்த பழம் பெயர்களும் ஒன்றென்று கூறலாம். சல்லியம் — அம்பு; பகைவருக்குச் சல்லியம் போன்று விளங்கும் மாண்புபற்றிச் 'சல்லியன்' எனப் பெயர் பெற்றனர். சேறாடிய யானை தன் உடலினை உராய்தலாற் சேறுபடிந்த புனற்காற் கொன்றையானது. 'நீடிய சடையோடு ஆடாமேனிக் குன்றுறை தவசியர்' போலத் தோன்றும் எனச் சுவையோடு உவமித்துத்துள்ளனர் இவர் (141). இதனால், பண்டைநாளிற் குன்றுகளிடத்தே சென்று தவ வாழ்வினரயிருந்தாரும் தமிழகத்தே இருந்தமை அறியப்படும். இதனால், பண்டைத் தமிழறிஞர்களிடையே தவமாற்றி வருகின்ற ஆன்மநெறிப்பாடு செறிவுற்றிருந்தமையும் காணப்படும்.

சாத்தந்தையார் 26

சாத்தன் தந்தை என்பது சாத்தந்தை எனவாயிற்று என்பர். சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளியை இவர்தம் புறப்பாட்டுக்களாற் சிறப்பித்துள்ளனர். இவருடைய மகனார் கண்ணன் சேந்தனார் என்பவர். புறநானூற்றுள் நான்கு செய்யுட்களும் இச்செய்யுளும் இவர் பாடியவையாம். தலைவியானவள் பிரிவறிந்து வேறுபட்டாளாக, அதனைத் தலைவனிடத்தே எடுத்துரைத்து அவன் செலவைத் தடுத்தற்கு முயலுகின்றாள் தலைவியின் தோழி, அவள் கூறுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/409&oldid=1711066" இலிருந்து மீள்விக்கப்பட்டது